தெலங்கானாவில் ஓவைசிக்கு இப்படியொரு பவரா.. அரசியல் விமர்சகர்கள் சொன்ன ஆருடம்! கேம் சேஞ்சர்?
ஹைதராபாத்: தெலங்கானாவில் அசாதுதீன் ஓவைசி கட்சியை சேர்ந்த 9 வேட்பாளர்களும் வெற்றி பெற்றால், புதிய மாநில அரசை தீர்மானிக்கும் சக்தியாக ஓவைசி இருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க தேவை மொத்தம் 60 இடங்கள். தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி - பிஆர்எஸ் ஆளும் கட்சியாக இருக்கிறது. முதல்வராக கே.சந்திரசேகர ராவ் பதவி வகித்து வருகிறார்.

தெலுங்கானா வாக்காளர்கள்: தெலுங்கானாவில் மொத்தம் 3,17,32,727 பேர் வாக்காளர்கள். இவர்களில் 3,17,17,389 பேர் பொது வாக்காளர்கள். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்காளர்கள் 15,338 . முதல் முறையாக வாக்களிப்பவர்கள் 5,32,990. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 4,43,943 பேர். 3-ம் பாலினத்தவர் 2,557 பேர் வாக்காளர்கள். தெலுங்கானாவில் மொத்தம் 35,356 polling வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் கடந்த 30ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாஜக, மஜ்லிஸ் கட்சி, ஜனசேனா, இடதுசாரிகள் ஆகியவை தெலுங்கானா தேர்தல் களத்தில் உள்ளன. பிஆர்எஸ் கட்சியும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக கூட்டணியில் ஜனசேனா இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளது. மற்றொரு இடதுசாரி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் (News18-MATRISE) காங்கிரசுக்கு 56 இடங்களும், பிஆர்எஸ் 48 இடங்களும், பாஜக 10 இடங்களும் மற்றவர்களுக்கு 5 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது. இதில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியின் சார்பில் 9 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். தெலங்கானாவில் 13 சதவிகிதம் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். சில நேரங்களில் புதிய அரசை இவர்களது வாக்குகள்தான் தீர்மானிக்கிறது.
அந்த வகையில் இந்த முறை ஓவைசியின் 9 வேட்பாளர்களும் வெற்றிபெற்றால் தெலங்கானாவில் புதிய அரசை தீர்மானிக்கும் சக்தியாக ஓவைசி தான் இருப்பார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த தேர்தலில் 8 தொகுதிகளில் இவரது கட்சியினர் போட்டியிட்டனர். அதில் 7ல் வெற்றிபெற்றனர். இப்படி இருக்கையில் இந்த முறை 9 தொகுதிகளிலும் வெல்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படி 9 வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் அவர்கள் பிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள். இது காங்கிரஸை ஓரம்கட்டிவிடும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் காங்கிரஸுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, பெரும்பான்மையான இடங்களை வெல்வது மட்டும்தான். தற்போது வரை பிரிக்கப்பட்டுள்ள தபால் ஓட்டுகளில் காங்கிரஸ்தான் முன்னணியில் இருக்கிறது. இருப்பினும் அது பாஜகவை வீழ்த்தும் அளவுக்கு முன்னணி பெறுமா என்பது வாக்கு எண்ணிக்கை முடிவில்தான் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications