பள்ளி குழந்தைகள் சுமை குறைக்க ''நோ பேக் டே'' அறிமுகம்- வாரத்தில் ஒருநாள் புத்தகம் தேவையில்லை!
ஹைதராபாத்: பள்ளிக்குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்கும் நோக்கில் தெலுங்கானாவில் வாரத்தில் ஒரு நாள் 'நோ பேக் டே' புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் ஐந்து வயதில் தான் பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் இன்று இரண்டரை வயதிலேயே ப்ரீகேஜி, அடுத்து எல்கேஜி, அதற்கு அடுத்த யுகேஜி என்று மூன்று வருடம் படிக்க வேண்டி உள்ளது. அதன்பிறகே 1ம் வகுப்புக்கு வருகிறார்கள்.
கல்வியின் அடிப்படைகள் கற்றுக்கொள்ளும் எல்கேஜி யுகேஜி வகுப்பில் உள்ள மொத்தபுத்தக நோட்டுகளை தூக்கி செல்வது எளிதானது அல்ல. அவ்வளவு எடை உள்ளது. ஒரு நாளைக்கு அளிக்கப்படும் ஹோம் ஒர்க்குகளை கேட்டால் ஆடிப்போய்விடுவீர்கள். 3 முதல் நான்கு ஹோம் ஒர்க்குகள் தரப்படுகிறது.

மாணவர்களுக்கு கல்வியை ஊட்டும் செயலாக இல்லாமல் திணிக்கும் செயலாக பல பள்ளிகளில் நடந்து வருகிறது. எல்லா மாணவர்களுக்கும் கல்வியை ஒரே அளவுகோலில் கற்பிக்கிறார்கள். பாடத்தை போர்டில் நடத்திவிட்டு ஹோம் ஒர்க் கொடுத்தால் வேலை முடிந்துவிட்டதாக சில ஆசிரியர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான முறையில் கல்வியை கற்பிக்க வேண்டிய நிலையே இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும். அவர்களை புரிந்து கொண்டு, அவர்கள் எப்படி கற்றுள்ளார்கள். அவர்கள் இன்னும் என்ன கற்க வேண்டும் என்று தனித்தனியாக மதிப்பீடு செய்வதே இப்போதைய கல்வியின் கட்டாய தேவையாகும்.
சரி விஷயத்திற்கு வருவோம். கல்வி மாணவர்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்ற நோக்கில், தெலுங்கானாவில் மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் 'நோ பேக் டே' புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர 'நோ பேக் டே' திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமையன்று இந்த 'நோ பேக் டே' கடைபிடிக்கப்படும் என்றும் அந்த நாட்களில் புத்தக பை கொண்டு செல்ல வேண்டாம் என்றும் ஆண்டு முழுவதும் மொத்தம் 10 பேக் இல்லாத நாட்கள் கடைபிடிக்கப்படும் என்றும் இதன்மூலம் மாணவர்கள் புத்தக பையை சிரமத்தோடு சுமந்து வருவது தடுக்கப்படும் என்றும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநில கல்வி காலண்டர் அண்மையில் வெளியிடப்பட்டது அதில் ஜூன் 12, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரையிலான கல்வியாண்டில் 'நோ பேக் டே' நாளாக அறிவித்த தேதிகளை அம்மாநில அரசு கோடிட்டு காட்டியுள்ளது. இந்த 'நோ பேக் டே' நாளில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது,
இதுகுறித்து தெலுங்கானா மாநில மாநில கல்விச் செயலாளர் கூறுகையில், இந்த 'நோ பேக் டே' நாளில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை தவிர மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகும். இந்த 'நோ பேக் டே' நாள் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும் என்றார்.












Click it and Unblock the Notifications