இதுதான் ஜன்னலா? குஜராத் தேர்தல் போட்டோ ஷூட்டுக்காக போலி வகுப்பறை.. விமர்சனத்தில் சிக்கிய மோடி!
ஹைதராபாத்: சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியை மேம்படுத்த 'மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ்' எனும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து பலர் தங்களது சந்தேகத்தை எழுப்பியிருந்தனர்.
மேலும், போட்டோ ஷூட்டுக்காக போலி வகுப்பறையை உருவாக்கிய ஒரே பிரதமர் என்று பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளரான ஒய்.சதீஷ் ரெட்டி விமர்சித்துள்ளார்.

குஜராத் தேர்தல்
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. பிரசாரத்தின்போது குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் குறித்து ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த பள்ளிகளின் தரத்தை சரிசெய்ய குறிப்பிட்ட ஆண்டுகள் வரை ஆகும் என்று டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவர்களுள் ஒருவரான மணீஷ் சிசோடியா விமர்சித்திருந்தார்.

அரசு பள்ளிகள்
ஆனால் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் சர்வதேச தரத்திற்கு இணையாக இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் விதமாகவும், எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டும் பாஜக 'மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ்' எனும் திட்டத்தை அறிவித்தது. 10,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு உலக வங்கியும் நிதியளிக்கும். இதனை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாநில கல்வி பலப்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டுகிறது.

புதிய திட்டம்
ஸ்மார்ட் வகுப்பறைகள் கணினி ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு இந்த திட்டத்தின் மூலம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மேற்குறிப்பிட்ட நிதியை கொண்டு 1.5 லட்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள், 20,000 கணினி ஆய்வகங்கள் மற்றும் 5,000 ஆய்வகங்கள் ஆகியவை உருவாக்கப்படும். இத்துடன் கூடுதலாக 50,000 வகுப்பறைகளும் அமைக்கப்படும். 5ஜி சேவை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் வகுப்பறைகள் விரைவில் நவீன மயப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

விமர்சனம்
இந்த திட்டத்தை தொடக்கி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்திருந்தார். ஆனால் இந்த புகைப்படங்களில்தான் சர்ச்சை தொடங்கியது. வகுப்பறைகள் அனைத்தும் போட்டோஷாப் செய்யப்பட்டவை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர். வகுப்பறையில் உள்ள ஜன்னல்கள் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என்றும், பிரதமர் அமர்ந்திருந்தது வகுப்பறை கட்டிடமே கிடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு போட்டோஷாப் மூலம் மக்களிடம் விளம்பரம் தேடும் பிரதமரை எப்படி நம்புவது என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

போட்டோஷாப்
இந்நிலையில் தெலங்கானாவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளரான ஒய்.சதீஷ் ரெட்டி வகுப்பறையில் பிரதமர் உள்ள படத்தை பகிர்ந்து "போட்டோ ஷூட்டுக்காக போலி வகுப்பறையை உருவாக்கிய ஒரே பிரதமர்" என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications