வெலவெலத்த எதிர்க்கட்சிகள்.. பாஜக ஆளாத மாநிலங்களில் தொடரும் ரெய்டுகள்.. இதுவரை எங்கெல்லாம் நடந்தது?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சமீப நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ரெய்டுகளை நடத்தி வருகின்றன. ஆனால் இப்படியான ரெய்டுகள் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மட்டுமே நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.

இந்நிலையில் இம்மாதிரியான ரெய்டுகள் இதுவரை எந்தெந்த மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளன என்கிற விவரங்களை இந்த செய்தி தொகுப்பு விரிவாக வழங்குகின்றது.

Opposition parties have alleged that CBI and enforcement agencies are carrying out raids in non-BJP states

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடும் அமளிகளுக்கிடையே சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகத்தினை முக்கிய பிரச்னையாக எழுப்பியிருந்தன. ஏனெனில் கடந்த காலக்கட்டங்களில் சிபிஐ அல்லது அமலாக்கத்துறை என அனைத்தும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலேயே ரெய்டுகளை மேற்கொண்டிருந்தன.

இந்த பிரச்னை நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் எழுப்பப்பட்டது. சமீபத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் ரெட்டி டிவிட்டரில் இந்திய வரைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், சில நாட்களாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ரெய்டு மேற்கொண்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், "பாஜக ஆட்சியில் இல்லாத 13 மாநிலங்களில் இந்த விசாரணை அமைப்புகள் தொடர் ரெய்டுகளை நடத்தியுள்ளன. ஏனென்றால் பாஜக மாநிலங்கள் அனைத்தும் ராஜா ஹரிச்சந்திராவின் உறவினர்களால் ஆளப்படுகின்றன" என கிண்டல் செய்து எழுதியிருந்தார்.

அதேபோல "கடந்த 8 ஆண்டுகளில் பாஜக தலைவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் மீது எத்தனை சிபிஐ அல்லது அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன" என தெலங்கானாவின் தொழில்துறை அமைச்சரும் டிஆர்எஸ் செயல் தலைவருமான கேடி ராமாராவ் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் இந்த பிரச்னை விவாதபொருளாக மாறியது. ஆனால் பாஜக இந்த விமர்சனங்கள் குறித்து பெரியதாக எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. பதிலையும் சொல்லவில்லை.

எதிர்க்கட்சிகள் வைக்கும் இப்படியான தொடர் விமர்சனங்களுக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ஏனெனில் சமீபத்தில்தான் கர்நாடகாவில் பாஜக அரசு கல்வித் துறையில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியது. இத்துறையில் மேற்கொள்ளப்பட்டும் திட்டங்களின் செலவீனங்களிலிருந்து 40 சதவீத கமிஷன் கோரப்படுவதாக ஒப்பந்ததாரர்கள் சங்கங்கள் குற்றம்சாட்டினர். இதேபோன்று பல குற்றச்சாட்டுகள் மேலெழுந்த நிலையில் தற்போது வரை மாநிலத்தில் அமலாக்கத்துறை அல்லது சிபிஐ தரப்பில் ஒரு ரெய்டு கூட மேற்கொள்ளப்படவில்லை. மேகாலயாவில், பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் என் மரக் தனது பண்ணை வீட்டில் விபச்சார விடுதி நடத்தியதாகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த மாநிலத்திலும் எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை.

ஆனால் பாஜக அல்லாத மாநிலங்களில் தொடர் ரெய்டுகள் நடத்தப்பட்டன. பஞ்சாபில் கடந்த ஜனவரியில் சிஆர்பிஎஃப் உதவியுடன் 40 குடோன்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோதும் மற்றும் அரிசியின் தரத்தை அறிய அதன் மாதிரிகளும் சேமிக்கப்பட்டன. டெல்லியில் நடத்த விவசாய போராட்டங்களுக்கு ஆதரவளித்த கமிஷன் ஏஜென்டுகளுக்கு இந்த குடோன்கள் சொந்தமானவையாகும். இந்த ரெய்டு தொடர்பாக மாநில அரசுக்கு எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

பஞ்சாபில் இப்படியெனில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் அம்மாநில முதலமைச்சரின் சகோதரர் அக்ரசென் கெலாட்டின் ஜோத்பூர் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு மேற்கொண்டது. உர வியாபாரியான அவர், ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். மட்டுமல்லாது சிபிஐ ரெய்டுக்கு முன்னர் அவரிடம் அமலாக்கத்துறை விசாணயை மேற்கொண்டிருந்தது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் விளைவாகவே இந்த ரெய்டு என சொல்லப்படுகிறது.

இந்த வரிசையில் மகாராஷ்டிராவின் கதை ஏறத்தாழ அனைவருக்கும் தெரிந்திருக்கும். மும்பையில் உள்ள பார் உரிமையாளர்களிடம் இருந்து காவல் துறை ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என்று அப்போதைய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரப் பீர் சிங்கின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டிசிபி ராஜு புக்பால், ஏசிபி சஞ்சய் பாட்டீல் உள்ளிட்டோருக்கு தொடர்புடைய 12 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. தேஷ்முக் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராவார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், திருச்சூரில் உள்ள கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் ரூ.312 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் வீடுகளில் ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். சத்தீஸ்கரில் ராய்பூர், துர்க் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நகைகள் மற்றும் துணி வியாபாரிகளின் வளாகங்களில் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், "கடந்த 8 ஆண்டுகளில் பாஜக தலைவர்களின் அலுவலகங்களில் ED, CBI அல்லது IT மூலம் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டன" என கேள்வியெழுப்பினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2011ல் நடந்த 34வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளது தொடர்பாக ஜார்க்கண்ட் முன்னாள் விளையாட்டு அமைச்சர் பந்து டிர்கேவுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் சிபிஐ ரெய்டு நடத்தியது. இவர் கடந்த 2020ல் காங்கிரசில் இணைந்தார். மேற்குவங்க மாவட்டத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகளின் ரெய்டுக்கு அளவே இல்லை என்று கூட சொல்லலாம். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், மாநிலத்தில் கால்நடை கடத்தல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா மற்றும் பிர்பூம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல ரெய்டுகள் நடத்தப்பட்டன. கடைசியாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்திது.

எனவே இந்த பட்டியலை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+