பின்னணியில் ‘பத்ராசலம்’ சம்பவம்.. ‘திட்டமிட்டே லீவில் அனுப்பி’.. தமிழிசை பொங்கியதற்கு காரணம் என்ன?
ஹைதராபாத் : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் - தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இடையே நிலவி வந்த மோதல் போக்கு, இன்று தமிழிசை பேசிய பேச்சால் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்குப் பின்னணியில் கேசிஆரின் புறக்கணிப்பு, பத்ராசல சம்பவம் ஆகியவை இருக்கின்றன.
ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பங்கேற்காமல் தவிர்த்து வந்ததும், அரசின் நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் தமிழிசை அழைக்கப்படாமல் இருந்து வந்ததுமே இந்த மோதலை பெரிதாக்கியது.
இப்படி மாநில ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே கடுமையான பனிப்போர் நீடித்து வந்த நிலையில் தான், இன்று ஆளுநர் தமிழிசை, தெலுங்கானா அரசு அவமரியாதை செய்வதாகப் பொங்கியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தலைவர் போல செயல்படுவதாக டிஆர்எஸ் கட்சியினர் விமர்சித்து வந்த நிலையில், ஆளுநரை மாநில அரசு அவமதிப்பதாக தமிழிசை கூறியுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா ஆளுநர்
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியதால், புதுச்சேரி மாநிலத்திற்கும் பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார் தமிழிசை. தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானாவில் ஆளுநராகப் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நான்காவது ஆண்டு தொடங்குவதையொட்டி இன்று ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளுநர் - முதல்வர் பனிப்போர்
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் - கவர்னர் ஆர்.என்.ரவி இடையே மோதல் இருப்பது போலவே, டெல்லி, மேற்கு வங்கம் என பல மாநிலங்களிலும் மோதல் போக்கு நிலவுகிறது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர் ராவுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது.

புறக்கணிப்பு
தொடக்கத்தில், முதல்வர் கேசிஆர் பாஜக அரசோடு இணக்கமாகச் செயல்பட்டு வந்த நிலையில் எந்த மோதலும் இல்லை. ஆனால், பாஜக அரசை கேசிஆர் விமர்சித்துப் பேசத் தொடங்கிய பிறகு தான் இது கவர்னர் - முதல்வர் மோதலாகவும் உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் பங்கேற்கும் விழாவுக்கு முதல்வர் கேசிஆர் செல்லாமல் இருப்பதும், எந்தவொரு அரசு நிகழ்ச்சிக்கும் ஆளுநர் புறக்கணிக்கப்படுவதும் தொடர்ந்தது. பிரதமர் மோடி தெலுங்கானாவிற்கு வரும் போதெல்லாம், அவரை வரவேற்கச் செல்லாமல் கேசிஆர் புறக்கணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் உரை இல்லாமல்
ஆளுநர் உரை இல்லாமலேயே கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரை முதல்வர் சந்திரசேகர் ராவ் நடத்தியது இந்த மோதலுக்கு மேலும் பெட்ரோல் ஊற்றுவதாக அமைந்தது. ஒவ்வொரு ஆண்டிலும் முதல்முறையாக சட்டசபை கூடும்போது தான் ஆளுநர் உரை கட்டாயம் தேவை என்பது விதி, இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை, கடந்த கூட்டத்தொடரின் தொடர்ச்சிதான் என்பதால் ஆளுநரின் உரை தேவையில்லை என்றது டிஆர்எஸ். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தமிழிசை, அரசின் முடிவைக் கண்டித்திருந்தார்.

பாஜக செய்தித் தொடர்பாளரா
அதைத் தொடர்ந்து ஆளுநரின் அரசியலமைப்பு அதிகாரத்தை மாநில அரசு அவமதிப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதேநேரத்தில் ஆளுநர் தமிழிசை பாஜகவின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படுவதாக தெலுங்கானா மாநில அமைச்சர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏப்ரல் மாதம் ராஜ்பவனில் ஆளுநர் நடத்திய உகாதிக்கு முந்தைய விழாக்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தபோதும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.

மனக்கசப்பு
முறையாக அழைப்பு விடுத்தும் கேசிஆர் கலந்து கொள்ளாதது ஆளுநர் தமிழிசைக்கு ஏமாற்றத்தையும் மனக்கசப்பையும் ஏற்படுத்தியது. கலந்து கொள்ளாதது ஒருபுறம் என்றால், அதுகுறித்து அரசு தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமோ, தகவலோ கூட சொல்லவில்லை என்பதுதான் தமிழிசைக்கு மிகவும் ஆத்திரமூட்டியது. அதேபோல் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி பவனில் நடைபெற்ற உகாதி கொண்டாட்டத்திற்கும் ஆளுநருக்கு முதலமைச்சர் அழைப்பு விடுக்கப்படவில்லை.

புரோட்டோகால் மீறல்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு நாள் பயணமாக பத்ராசலத்துக்கு சென்றார். அவரது பயணம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தும், அவரை வரவேற்பதற்கு அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி வரவில்லை. பத்ராத்ரி-கொத்தகுடம் ஆட்சியர் அனுதீப் துரிசெட்டி, மாவட்ட எஸ்.பி. சுனில் தத் ஆகியோர் இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றுவிட்டனர். தமிழிசைக்கு ஹெலிகாப்டர் ஏற்பாடும் செய்யப்படாததால் ரயில் மற்றும் காரில் அவர் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

அரசே லீவு கொடுத்து அனுப்பியதா?
இது தமிழிசைக்கு பெரும் சங்கடத்தைக் கொடுத்த நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவலும் தமிழிசைக்கு கிடைத்தது. அதாவது, கவர்னர் வரும் நேரத்தில், மாவட்ட கலெக்டரையும், எஸ்.பியையும் லீவில் செல்லுமாறு முதல்வ அலுவலகமே அறிவுறுத்தியதாக ஒரு தகவல் பரவியது. இதனால் கடுமையாக அப்செட் ஆனார் தமிழிசை. இதன் காரணமாகவே, தான் எங்கு சென்றாலும் புரோட்டோகால் பின்பற்றப்படுவதில்லை என தனது ஆதங்கத்தை இன்று கொட்டித்தீர்த்துள்ளார் ஆளுநர் தமிழிசை.

வரம்பு மீறல்
இப்படியாக தொடர்ந்த மோதல் போக்கால், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து தெலுங்கானா மாநில அரசு ஆளுநருக்கு உரிய மரியாதை வழங்குவதில்லை என புகார் தெரிவித்தார் தமிழிசை சௌந்தரராஜன். இதையடுத்து ஜூன் 10ஆம் தேதி ராஜ்பவனில் பிரஜா தர்பார் நடத்தி மக்களின் குறைகளை கேட்க தொடங்கினார் தமிழிசை. மாநில அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட விரும்புவதாக அவர் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கானா அரசு, ஆளுநர் தனது வரம்பை மீறுகிறார் எனக் குற்றம்சாட்டியது.

பொங்கிய ஆளுநர் தமிழிசை
இந்நிலையில் தான், தெலங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்று 4ஆம் ஆண்டு விழாவில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஒரு பெண் ஆளுநராக தான் அவமதிக்கப்பட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பெண் ஆளுநர் பாரபட்சமாக நடத்தப்பட்டதை, இந்த மாநிலத்தின் சரித்திரம் எழுதும், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றம் உரிமை எனக்கு மறுக்கப்பட்டது. தெலுங்கானா சட்டப்பேரவையில் கவர்னர் உரை ஆற்றுவதும் மறுக்கப்பட்டது, நான் எங்கு சென்றாலும், நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனக் குமுறியுள்ளார் ஆளுநர் தமிழிசை.












Click it and Unblock the Notifications