இஸ்லாமிய அரசு ஊழியர்களுக்கு ‛ஜாக்பாட்’.. ரம்ஜான் மாதத்தில் முக்கிய அறிவிப்பு.. பாஜக கடும் எதிர்ப்பு
ஹைதராபாத்: இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் உள்ளது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் விரதம் நோன்பு நோற்பர். ரம்ஜான் மாதத்தையொட்டி அரசு பணியில் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று தெலுங்கானா காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் இஸ்லாமிய அரசு ஊழியர்களுக்காக புதிய அறிவிப்பை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. விரைவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு இஸ்லாமியர்களை ஹேப்பியாக்கி உள்ளது.

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பை கடைப்பிடித்து ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். மாலையில் இப்தார் விருந்து வைத்து விரதத்தை முடிப்பார்கள். நம் நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் கொண்டாடப்படும் நிலையில் சில இடங்களில் அந்த பண்டிகை நாள் என்பது சற்று மாறுபடும். இந்நிலையில் தான் இஸ்லாமியர்களின் நோன்புக் காலம் தொடங்கவுள்ளது. இப்படியான நிலையில் தான் தெலுங்கானா அரசு இஸ்லாமிய அரசு ஊழியர்களுக்கான பணி நேரத்தை குறைத்து அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛மார்ச் 2ம் தேதி பிறையை பொறுத்து தொடங்கும் ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே மாலை 4 மணிக்கே அலுவலகங்களை விட்டு வெளியேறலாம். இந்த நடைமுறை என்பது மார்ச் மாதம் 31ம் தேதி வரை இருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங், வாரியம் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்குப் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங் கூறுகையில், ‛‛தெலுங்கானா காங்கிரஸ் அரசு இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இது மதப்பிளவுகளை அதிகரிக்கும். வேறுபாட்டை ஊக்குவிக்கும்'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல் பாஜகவின் ஐடி விங் பிரிவின் தேசிய பொறுப்பாளர் அமித் மாளவியா, ‛‛தெலுங்கானாவில் ரம்ஜான் காலத்தில் முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு வேலை நேரத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் திருப்திப்படுத்தும் அரசியல். நவராத்திரி விரதத்தின் போது இந்துக்களுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. ஆனால் இஸ்லாமியர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் ஓட்டு வங்கி அரசியலை இது காட்டுகிறது'' என்று விளாசி உள்ளார்.












Click it and Unblock the Notifications