சனாதனத்தை காக்க தேசிய அளவில் புது வாரியம்.. திருப்பதி லட்டு சர்ச்சையால் பவன் கல்யாண் புது ஐடியா
ஹைதராபாத்: திருப்பதி கோவிலில் தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மீன் எண்ணெய், பன்றி மற்றும் மாட்டு கொழுப்பு சேர்க்கப்படுவது தெரியவந்துள்ளது. இது பெரும் சர்ச்சையான நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்சிவந்துள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. தவறு செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். மேலும் கோவில்கள் தொடர்பான பிரச்சனையை அணுக தேசிய அளவில் சனாதன தர்ம ரக்சன வாரியம் அமைக்க வேண்டும் என்று புது ஐடியா கொடுத்துள்ளார்.
ஆந்திராவில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தோல்வியடைந்தார். இதையடுத்து முதல்வர் பதவியை அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ராஜினாமா செய்தார்.

அதேவேளையில் ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் + ஜனசேனா + பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராகி உள்ளார். ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் சந்திரபாபு நாயுடு, ‛‛திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை சீர்க்குலைத்த ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும்’’ என்றார். இதனை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்தது.
திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்.. ஆய்வில் உறுதி! பக்தர்கள் ஷாக்
இந்நிலையில் தான் திருப்பதி லட்டுவை தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்தது தெரியவந்தது. மீன் எண்ணெய், பன்றி மற்றும் மாட்டு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. திருப்பதி கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் ஏராளமானவர்கள் சென்று வரும் நிலையில் இந்துக்களின் நம்பிக்கையை இழிவுப்படுத்திவிட்டதாக வலைதளங்களில் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் ஆந்திர அரசு விசாரணையை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் கடும் கவலையடைந்துள்ளதாக கூறியுள்ளார். இதுபற்றி பவன் கல்யாண், ‛‛திருப்பதி பாலாஜி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி)கண்டறியப்பட்டு இருப்பதை நினைத்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சனாதன தர்மத்தை எந்த வடிவதத்திலும் இழிவுப்படுத்தக்கூடாது.
“இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்”.. திருப்பதி லட்டு விவகாரத்தில் இயக்குநர் மோகன் ஜி காட்டம்!
இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் இதுதொடர்பாக பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். தற்போது நடந்த இந்த விவகாரம் என்பது கோவில்கள் மற்றும் பிற தர்மத்தின் நடைமுறையையும், நம்பிக்கையையும் இழிவுப்படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications