Myrmecophobia: எறும்புகளை கண்டாலே பயம்! 3 வயது குழந்தையை தவிக்க விட்டு பெண் தற்கொலை
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சங்காரெட்டி மாவட்டத்தில் தன் வீட்டில் இருந்த எறும்புகளை பார்த்து பயந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எறும்புகளை பார்த்து பயப்படுவதற்கு மிர்மிகோஃபோபியா என அழைக்கிறார்கள்.
சங்காரெட்டி எனும் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனிஷா (25). இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மனிஷாவுக்கு சிறு வயது முதலே எறும்புகள் மீது அதீத பயம் இருப்பதாக தெரிகிறது.

இந்த பயத்திற்கு பெயர் மிர்மிகோஃபோபியா என அழைக்கிறார்கள். இதற்காக மனிஷா தனது சொந்த ஊரான மஞ்சேரியில் ஒரு மருத்துவமனையில் கவுன்சிலிங் பெற்று வந்தாராம்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி அன்று மனிஷாவின் கணவர் ஸ்ரீகாந்த் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டாராம். அப்போது வீட்டை சுத்தம் செய்ய தனது குழந்தையை அருகில் உள்ள உறவினர் வீட்டில் மனிஷா விட்டுவிட்டு வந்தாராம்.
இதைத் தொடர்ந்து மாலை வேலை முடிந்து, ஸ்ரீகாந்த் வீடு திரும்பிய போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பின்னர் அக்கம்பக்கத்தினர் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துள்ளார்.
அப்போது வீட்டில் மின்விசிறியில் மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் போலீஸார் வீட்டை ஆய்வு செய்த போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் மனிஷா, "என்னை மன்னித்துவிடுங்கள் ஸ்ரீ, என்னால் இந்த எறும்புகளுடன் வாழ முடியாது. அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன். குழந்தையையும் மாமியாரையும் கவனித்துக் கொள்ளுங்கள்" என கூறியிருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனிஷா வீட்டை சுத்தம் செய்த போது எறும்புகளைக் கண்டு பயந்து தற்கொலை செய்திருக்கக் கூடும் என போலீஸார் தெரிவித்தனர்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயத்தை கண்டால் பயம் இருக்கு. சிலருக்கு சாதாரணமாக இருக்கும், சிலருக்கு தீவிரமாக இருக்கும். சாதாரணமாக பயம் இருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தீவிரமாக இருப்பதுதான் ஃபோபியா என்கிறார்கள்.
அதாவது சோசியல் ஃபோபியா என்றால் சமூக நிலைகளை கையாள்வதற்கு பயம், எட்டுக் கால் பூச்சிகளை பார்த்து பயந்தால் ஆரச்னோஃபோபியா, பாம்புகளை பார்த்து பயந்தால் ஓஃபிடியோஃபோபியா, ரத்தத்தை பார்த்து பயந்தால் ஹீமோஃபோபியா, கார் ஓட்டுவதற்கு பயந்தால் அமாஸோஃபோபியா, கூட்டத்தை பார்த்து பயந்தால் எனோச்லோஃபோபியா, இரவை பார்த்து பயந்தால் நாக்டிஃபோபியா, மருத்துவரை பார்த்து பயந்தால் லாட்ரோஃபோபியா, பேய்களை பார்த்து பயந்தால் பாஸ்மோஃபோபியா என நிறைய இருக்கின்றன.
அது போல்தான் எறும்பை கண்டு பயப்படுவதற்கு மிர்மிகோஃபோபியா என்கிறார்கள். சிறு வயது முதல் எறும்பை கண்டு அஞ்சிய மனிஷாவுக்கு வீட்டை சுத்தப்படுத்திய போது கொத்து கொத்தாக எறும்பு இருப்பதை பார்த்ததும் பயம் வந்துவிட்டது. அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றே சொல்லப்படுகிறது.
எப்போதுமே தற்கொலை என்பது எதற்கு தீர்வல்ல. மனிஷா தற்கொலை செய்து கொண்டதால் இன்று அவரது கணவரும் 3 வயது குழந்தையும் ஆதரவற்று நிற்கிறார்கள். இதை மனிஷா யோசித்திருக்கலாம். தற்கொலை எண்ணம் வந்தால் 104 அல்லது 044-24640050 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications