
வாரம் 2 நாள் விடுப்பு! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி! மணிப்பூரில் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஏப்ரல் 1 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படும். பிற 2 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மார்ச் 10ல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்ததது. பீரன்சிங் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.
மணிப்பூர் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பிரேன் சிங்! - தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது பாஜக!

அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
இந்நிலையில் மார்ச் 22ல் முதில்வர் பீரன்சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் அரசு அலுவலகங்களின் நேரத்தை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படவும், 2 நாள் விடுமுறை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

2 நாள் விடுப்பு
இதுதொடர்பாக தற்போது மணிப்பூர் அரசின் துணைச் செயலர் சுனந்தா தோக்சோம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் அனைத்து அரசு துறை நிறுவனங்கள், அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும். அதன்படி கோடைக்காலமான மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், குளிர்காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் அலுவலகம் செயல்படும். 2 நடைமுறையிலும் மதிய உணவு இடைவேளை 1 முதல் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும்.

மகிழ்ச்சி
பள்ளிகளை பொறுத்தமட்டில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை காலை 8 மணிக்கு துவக்கலாம். இதுதவிர நேரத்தை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் செய்து வழங்கலாம்'' என அதில் கூறப்பட்டுள்ளது. வாரம் 2 முறை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

புத்துணர்வு
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‛‛அரசுஅலுவலகங்கள் 5 நாள் மட்டுமே செயல்படும் என்பதால் 2 நாள் விடுப்பு கிடைக்கும். இது புத்துணர்ச்சியை வழங்கும். மேலும் வீட்டு வேலைகளை மேற்கொள்வதுடன், குழந்தைகள் மீதும் கவனம் செலுத்தலாம். அத்துடன் பிற 5 நாட்கள் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். பணியும் விரைவாக முடியும்'' என்றனர்.