சென்னை வழியாக அகமதாபாத்தில் ஊருவிய 4 இலங்கை ஐ.எஸ். தீவிரவாதிகள்-லோக்சபா தேர்தலை சீர்குலைக்க சதி?
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிக்கிய இலங்கையைச் சேரந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்ததாக பயங்கரவாத எதிர்ப்புப் படையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனராம்.
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல ஆண்டுகளாக வேரூன்றி நிற்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு. இலங்கையில் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு நாளில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட கொடூர மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையில் 2009-ம் ஆண்டு தமிழர்களுடனான இறுதி யுத்தத்துக்குப் பின்னரான மிக மோசமான பேரழிவு இது.

இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக இலங்கைக்கு இந்தியா முன்னரே எச்சரிக்கை அனுப்பியும் அந்த நாடு அலட்சியம் செய்ததாகவும் சர்ச்சை வெடித்திருந்தது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 சந்தேக நபர்களை அம்மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நேற்று சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் துருவித் துருவி நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இலங்கையைச் சேர்ந்த 1) முகமது பரீஸ், 2) முகமது நஃப்ரான், 3) முகமது ரசுதீன், 4) முகமது நுஸ்ரத் ஆகியோர் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த 4 பயங்கரவாதிகளும் இந்தியாவில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டி இருந்தனரா? இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் நாசவேலைகளை மேற்கொள்ள திட்டம் தீட்டி இருந்தனரா? என்பது தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் தொடர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைகளின் போது, இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் வந்ததாகவும் இதற்காக ரூ4 லட்சம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டின் சென்னைக்கு வந்ததாகவும் சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு விமானம் மூலம் வந்ததாகவும் 4 பயங்கரவாதிகளும் தெரிவித்துள்ளனர்.
மேலும் குஜராத் மாநிலம் காந்திநகரின் புறநகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தாங்கள் எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் பாகிஸ்தானில் இருந்து வர வேண்டிய கட்டளைக்காக காத்திருக்க தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் 4 பேரும் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர். இந்த 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications