இவ்வளவு லட்சமா! ராகுல் காந்திக்கு தனது சொத்தை எழுதி கொடுத்த 78 வயது மூதாட்டி.. நெகிழ்ச்சி காரணம்!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 78 வயது மூதாட்டி புஷ்பா முன்சியால் என்பவர் தனது ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துகள், 100 கிராம் தங்க நகைகள் என அனைத்தையும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு எழுதி கொடுத்துள்ளார். மேலும் அவரது யோசனைகள் நாட்டுக்கு தேவை என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இன்றைய நாட்களில் பலர் தங்களின் சொத்துக்களை மகன், மகள்களை தாண்டி ஆசிரமங்கள், தங்களை பராமரிக்கும் நபர்கள், தங்களுக்கு பிடித்தமான நபர்களின் பெயர்களில் எழுதி வைக்கின்றனர்.
அந்த வகையில் 78 வயது மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பெயருக்கு எழுதி வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

ராகுல் பெயருக்கு சொத்து
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் புஷ்பா முன்சியால் (வயது 78). இவர் 'உயில்' ஒன்றை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்தார். அதில்,‛‛எனக்கு சொந்தமான தங்க நகைகள் உள்பட அனைத்து சொத்துகளும் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கு எழுதி வைக்கிறேன்'' என குறிப்பிட்டு இருந்தார்.

‛உயில்’ ஒப்படைப்பு
இந்த உயில் பத்திரத்தை ராகுல் சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரீத்தம் சிங் பெற்றுகொண்டார். இதுபற்றி டேராடூன் மாநகர காங்கிரஸ் தலைவர் லால்சந்த் சர்மா கூறுகையில், ‛‛உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரீதம் சிங் வீட்டில் வைத்து புஷ்பா முன்சியால் தனது சொத்துகளின் உரிமைகளை ராகுல் காந்திக்கு மாற்றி கொடுத்ததற்கான உயிலை கொடுத்தார்'' என்றார்.

மூதாட்டி விளக்கம்
இது குறித்து அந்த மூதாட்டி புஷ்பா முன்சியால் கூறியதாதவது: மறைந்த பிரதமர்களான இந்திரா காந்தி, அவரது மகன் ராஜிவ் காந்தி ஆகியோர் நாட்டின் ஒற்றுமை, ஒருமைபாட்டிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் சோனியா, ராகுல்காந்தி. இவர்கள் நாட்டுக்கு சேவை செய்துள்ளதோடு, தொடர்ந்து தங்களை அர்பணித்து வருகின்றனர். இவர்களின் செயல்பாடு என்னை அதிகமாக கவர்ந்துள்ளது. ராகுல்காந்தியின் திட்டங்கள், சிந்தனைகள், யோசனைகள் நாட்டுக்கு நிச்சயம் தேவையானதாக இருக்கும். எனவே எனது அனைத்து சொத்துக்களையும் ராகுலுக்கு உயில் எழுதி கொடுக்கிறேன்'' என்றார்.

எவ்வளவு சொத்து
ராகுலுக்கு மூதாட்டி புஷ்பா மன்சியால் மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மற்றும் 10 டோலோ(100 கிராம்) தங்க நகைகளை எடுத்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications