யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 1 லட்சம் நன்கொடை.. 80 வயது பாட்டிக்கு குவியும் பாராட்டு!
யாசகம் பெற்ற பணத்தில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை தந்த மூதாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உடுப்பி: தனது சாப்பாடுக்கே வழியில்லாமல் யாசகம் கேட்டு வாழ்க்கையை நடத்தி வரும் சூழலிலும், அன்னதானம் வழங்குவதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை நன்கொடையாக வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் கர்நாடகத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர்.
கர்நாடக மாநிலம், உடுப்பி காச்சகோட்டையைச் சேர்ந்தவர் அஸ்வத்தம்மா. நாடக கம்பெனி நடத்திவந்த இவரது கணவர், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், 80 வயதான இவர் கோவில்களில் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் அஸ்வத்தம்மாவின் மீது இரக்கம் கொண்டு பலர் அவருக்கு பண உதவி செய்து வருகின்றனர். அப்படி கிடைக்கும் பணத்தில் தனது செலவுக்குப் போக மீதி பணத்தை வங்கி ஒன்றில் டெபாசிட் செய்து வருகிறார் அஸ்வத்தம்மா. அதோடு, வருடா வருடம், மங்களூரு அருகே உள்ள பொளலி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாவின் போது அன்னதானம் வழங்குவதையும் அவர் வழக்கமாக வைத்து வருகிறார். மீதமுள்ள பணத்தை கோவில்களுக்கும், டிரஸ்ட்களுக்கும் நன்கொடையாக கொடுத்து விடுகிறார். ஒன்றல்ல.. இரண்டல்ல சுமார் 18 வருடங்களுக்கு மேலாக இப்படி யாசகம் செய்துவரும் அஸ்வத்தம்மா, இதுபோன்று கோயில்களுக்கு நன்கொடையளிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல், சமீபத்தில் நடந்த ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவின் போதும், அன்னதானத்திற்காக சேர்த்து வைத்த ரூ.1 லட்சம் பணத்தை அஸ்வத்தம்மா வழங்கி இருக்கிறார். இது குறித்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அஸ்வத்தம்மாவிற்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
"வெறுங்கையுடன் தான் நான் இந்த உலகத்துக்கு வந்தேன், திரும்பிச் செல்லும்போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. இந்த சமூகம் எனக்கு அளித்த பணத்தை இந்த சமூகத்துக்கே நான் திருப்பித் தர வேண்டும். யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதே என்னுடைய ஒரே பிரார்த்தனை" என தனது நோக்கம் பற்றிக் கூறுகிறார் அஸ்வத்தம்மா.












Click it and Unblock the Notifications