90 ஐஏஎஸ்கள் நாட்டை ஆள்கிறார்கள்.. அதில் வெறும் 3 பேர் தான் ஓபிசி.. மற்றவர்கள் எங்கே? ராகுல் ஆவேசம்!
டெல்லி: ஓபிசி மக்களின் பிரதிநித்துவம் வெகுவாக குறைந்திருப்பது பற்றி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.
காங்கிரஸ் முன்னணி தலைவரும், வயநாடு லோக்சபா தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, குஜராத் மாநிலம் பதான் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்தன்ஜி தாக்கூரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, "டெல்லியில் இருந்து இந்திய அரசை நடத்துபவர்கள் 90 ஐஏஎஸ் அதிகாரிகள். இந்த 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் மட்டுமே உள்ளனர். அவர்களையும் சிறிய துறைகளில் பொறுப்பு கொடுத்து ஒரு மூலையில் உட்கார வைத்துள்ளனர்.
நிதி அமைச்சகத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஐஏஎஸ் அதிகாரி கூட இல்லை. முக்கியமான அமைச்சகங்களில் ஓபிசி பிரிவினர் யாருமே இல்லை. அவர்கள் தான் பட்ஜெட்டில் ஒவ்வொரு ரூபாயையும் பகிர்ந்து அளிக்கிறார்கள். 3 ஓபிசி, 3 தலித், 1 ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்தியாவின் பட்ஜெட்டை பார்த்தால் ஒவ்வொரு 100 ரூபாயில் 6 ரூபாய் 10 பைசா மட்டுமே ஓபிசி பிரிவினர், பட்டியலின பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி மக்களின் எண்ணிக்கை 90 சதவீதம். ஆனால், உங்கள் பங்கு நூற்றில் வெறும் 6 ரூபாய் 10 பைசா தான்.
டெல்லியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தான் பட்ஜெட் நிதியை விநியோகிக்கிறார்கள். குஜராத்துக்கு எவ்வளவு பணம் செல்கிறது, புல்லட் ரயிலுக்கு எவ்வளவு செல்கிறது, அக்னிவீர் திட்டம் நடக்குமா நடக்காதா? தலித் மக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி உதவித்தொகை எவ்வளவு வழங்கப்படும், எத்தனை சாலைகள் அமைக்கப்படும்? எங்கெங்கு அமைக்கப்படும்? உட்கட்டமைப்புக்கு எவ்வளவு பணம் செல்லும் என அனைத்து முடிவுகளும் இந்த ஐஏஎஸ் அதிகாரிகளால் தான் எடுக்கப்படுகின்றன.
என் கேள்வி என்னவென்றால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி மக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் கார்ப்பரேட்டில் இல்லை, மீடியாவில் இல்லை, தனியார் மருத்துவமனைகளை நடத்தவில்லை, தனியார் பல்கலைக்கழகங்களை நடத்தவில்லை, அரசு உயர் பதவிகளில் இல்லை.
அப்படி என்றால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையற்ற இளைஞர்கள், சிறு வணிக உரிமையாளர்களாக இருக்கிறார்கள். எங்கும் அவர்களுககு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம்.
அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு ஆளும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் திட்டமிடுகின்றன. இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக அவர்கள் உள்ளனர்" என ஆவேசமாகப் பேசியுள்ளார் ராகுல் காந்தி.
நாட்டில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் 190 தொகுதிகளுக்கு நிறைவடைந்துள்ள நிலையில் 3வது கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் குஜராத் மாநிலத்தில்தான் அதிக தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications