குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. "நான்தான் கடவுள் அனுப்பிய நபர்".. ஏமாற்றி பலாத்காரம் செய்த சாமியார்
இதற்கு முன்னர் இதேபோல ஒரு சாமியார் தன்னிடம் ஆசி பெற வந்த இளம்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
காந்திநகர்: கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த இளம்பெண்ணை குழந்தை வரம் கொடுப்பதாக கூறி அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோத்ராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியை சேர்ந்தவர் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 2013ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எனவே அடிக்கடி குடும்பத்தில் சண்டை உருவாகியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இக்குடும்பத்தில் இருந்தால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்று ராதா தனது கணவரிடம் கூற இருவரும் தனியாக சென்று வசித்துள்ளனர்.
இப்படியே 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் நம்பிக்கையை கைவிடாத ராதா கோத்ராவில் உள்ள டிம்பி ஆசிரமத்தின் ராமர் கோயில்களுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளார். ராதாவை அடிக்கடி கோயிலில் பார்த்த ராமகிருஷ்ணகுமார் எனும் சாமியார் என்ன விஷயம் என்று கேட்டுள்ளார். அதற்கு ராதா தன்னுடைய சோகக்கதையை கூறியுள்ளார். இக்கதையை கேட்ட ராமகிருஷ்ண குமார் ராதாவுக்கு உதவுதாக கூறியுள்ளார்.

விரதம்
ராதாவும் இதனை நம்பியுள்ளார். சுமார் மூன்று மாத காலம் பூஜை, பரிகாரம், விரதம் என இவர் சொன்ன அனைத்தையும் ராதா கேட்டிருக்கிறார். அப்படி இருந்தும் குழந்தை பிறக்கவில்லை. எனவே ராதா கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை கைவிட்டு வந்துள்ளார். ஆனால், ராமகிருஷ்ணன் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என்றும், தன்னை முழுமையாக நம்புமாறும் கூறியுள்ளார். ராதாவின் நம்பிக்கையை போக்க மூன்று பூஜைகள் நடத்தப்படும் என்றும் மூன்றாவது பூஜையின் முடிவில் குழந்தை பேறுக்கான நற்செய்தி கிடைக்கும் என்றும் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதல் பூஜை நடந்து முடிந்துள்ளது.

குழந்தை
ஒவ்வொரு பூஜையின்போதும் ராதா முழு கவனத்துடனும் பக்தியுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதேபோல தன்னை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் ராமகிருஷ்ணன், ராதாவிடம் கூறியுள்ளார். இவர் கூறியதை போலவே ஒவ்வொரு நிகழ்வுகளையும் ராதா கவனித்து வந்திருக்கிறார். இதற்கிடையில் இரண்டாவது பூஜையும் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து மூன்றாவது பூஜை தொடங்குவதற்கு முன்னர் ஏதாவது ஒரு வகையில் கடவுள் குழந்தைக்கான வாய்ப்பை காட்டி கொடுப்பார் என்று ராமகிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

பலாத்காரம்
மூன்றாவது பூஜைக்கு முன்னர் கடுமையான விரதம் தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பூஜை தொடங்கியிருக்கிறது. பூஜையின் போது ராதா கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நிலையில், ராமகிருஷ்ணன் குறுக்கே வந்து தான்தான் கடவுள் அனுப்பிய ஒரே வாய்ப்பு என்று கூறி ராதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனை எதிர்பார்க்காத ராதா அங்கிருந்து தப்ப முயன்றிருக்கிறார். ஆனால், ராமகிருஷ்ணன் வலுக்கட்டாயமாக ராதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கைது
புகாரையடுத்து காவல்துறையினர் ராமகிருஷ்ணனை கைது செய்துள்ளனர். குஜராத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இதற்கு முன்னர் இதேபோல ராஜ்பார்ட் எனும் சாமியார் ஒருவர் தன்னிடம் ஆசி பெற வந்த பெண்ணின் செல்போன் நம்பரை பெற்று அவருக்கு ஆபாச படங்களை அனுப்பியிருக்கிறார். மட்டுமல்லாது, நள்ளிரவில் போன் செய்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும், தன்னுடைய இடத்திற்கு வரவேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் இந்த வாட்ஸ்அப் சேட்களை வெளியிட்ட நிலையில் சாமியாரை கைதுசெய்ய காவல்துறை திட்டமிட்டது. ஆனால் சாமியார் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications