பரபர குஜராத் தேர்தல்.. பாஜக அடிமடியிலேயே கை வைத்த ஆம் ஆத்மி.. பக்கா ஸ்கெட்ச் போடும் கெஜ்ரிவால் படை!
காந்திநகர்: குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக ஜாதி அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கும் ஆம் ஆத்மி, பாஜகவுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
குஜராத்தில் பெரும்பான்மை சமூகத்தினரான படேல் சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்து ஆம் ஆத்மி காய் நகர்த்தி வருவது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஏற்கனவே பாஜக மீது அதிருப்தியில் இருக்கும் படேல் சமூகத்தினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

குஜராத் முக்கியம் பிகிலு
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் டிசம்பர் 1 மறறும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய குஜராத் தேர்தலை ஒட்டுமொத்த நாடும் கவனித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் முடிவுகள், 2024 மக்களவைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

சிங்கத்தை குகையில் சந்திக்கும் ஆம் ஆத்மி
குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. தற்போது மத்தியிலும் ஆட்சியில் இருப்பதால், குஜராத்தின் மீதான தனது பிடியை இறுக்கியுள்ளது பாஜக. ஆனால், இதுகுறித்து எல்லாம் கவலைப்படாமல் ஆம் ஆத்மி துணிச்சலாக குஜராத் தேர்தல் களத்தில் இறங்கியது. முதலில், ஆம் ஆத்மி குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பு வெளியானதுமே, அக்கட்சி கடுமையான கிண்டல், கேலிக்கு ஆளாகியது. இங்கு பாஜகவை வீழ்த்த முடியாமல் காங்கிரஸே திணறி வரும் நிலையில், ஆம் ஆத்மியால் என்ன செய்துவிட முடியும் என பல மூத்த அரசியல் நிபுணர்களே விமர்சித்து வந்தனர். ஆனால், ஆம் ஆத்மியின் அதிரடியான தேர்தல் வியூகத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை.

கேஜ்ரிவால் எடுத்த ஜாதி அஸ்திரம்
குஜராத் தேர்தலிலும் 'டெல்லி மாடல்' பிரச்சாரத்தைதான் ஆம் ஆத்மி மேற்கொள்ளும் என நினைத்து எள்ளி நகையாடி வந்த பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அர்விந்த் கேஜ்ரிவால். பாஜகவுக்கு போட்டியாக இந்துத்துவா ஆதரவு அரசியலை அவர் கையில் எடுத்தை பாஜக மட்டுமல்ல அவரது கட்சியினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்துத்துவாக்கு எதிரி என ஆம் ஆத்மியை காட்ட நினைத்த பாஜகவுக்கு இது சம்மட்டி அடியாக இருந்தது. இந்துத்துவா அரசியல் செய்வது ஒபுறம் இருக்க, யாரும் எதிர்பார்த்துள்ள ஜாதி அஸ்திரத்தையும் கையில் எடுத்துள்ளது ஆம் ஆத்மி. குஜராத்தில் பெரும்பான்மையாக இருக்கும் படேல் சமூகத்தினரை குறிவைத்தே அக்கட்சி காய் நகர்த்தி வருகிறது.

பாஜக மீது அதிருப்தி
குஜராத் அரசியலில் முக்கிய வாக்குவங்கியாக கருதப்படுவது படேல் சமூகத்தினரின் வாக்கு வங்கிதான். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான படேல் வாக்குகளை பாஜகவே அறுவடை செய்து வந்தது. ஆனால், இடஒதுக்கீடு கோரி 2015-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்திய படேல் சமூகத்தினரை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது பாஜக. இந்தப் போாரட்டத்தில் பங்கேற்ற 14 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும், பலர் மீது இப்போது வரை வழக்குகள் நடைபெறுவதையும் படேல் சமூகத்தினருக்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிப்போயிருக்கும் பாஜக
பாஜக மீதான படேல் சமூகத்தினரின் இந்த அதிருப்தியை தனக்கு சாதகமாக மாற்ற ஆம் ஆத்மி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக படேல் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதோடு மட்டுமல்லாமல், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் படேல் இளைஞர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வோம் எனவும் ஆம் ஆத்மி உறுதி அளித்திருக்கிறது. இவ்வாறு படேல் சமூகத்தின் காவலனாக தன்னை காட்டிக் கொள்ளும் ஆம் ஆத்மிக்கு படேல் சமூகத்தினர் மத்தியில் மிகுந்த ஆதரவு இருப்பதாகவும் தேர்தல் கணிப்புகளில் தெரியவந்துள்ளன. இதற்கு போட்டியாக, படேல் போராட்டத்துக்கு தலைமை வகித்த ஹர்திக் படேலுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறது பாஜக. ஆனாலும், பாஜக மீதான கோபத்தை படேல் சமூகத்தினர் இன்னும் கைவிடவில்லை. தங்கள் மாநிலத்துக்கே வந்து தங்கள் அடி மடியிலேயே கை வைக்கும் ஆம் ஆத்மியை கண்டு பாஜக சற்று ஆடித்தான் போயிருக்கிறது.












Click it and Unblock the Notifications