மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம்.. அதானி மகன் திருமணத்துக்கு முன்பாக சூப்பர் செய்தி!
அகமதாபாத்: இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும் திவா ஷாவுக்கும் வரும் 7 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் தனது திருமண நாளன்று 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் ஜீத் அதானி.
இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராக இருக்கும் அதானி குழும தலைவர் கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானியின் திருமணம், குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜீத் அதானி, வைர வியாபாரியின் மகளான திவா ஷாவை கரம் பிடிக்கிறார்.

அதானி மகன் திருமணம்
பிப்ரவரி 7 ஆம் தேதி அகமதாபாத்தில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இன்று முதலே திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. இவர்களது திருமணம் சில நூறு பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் நடத்தப்படுகிறது. ஜீத் அதானிக்கும் திவா ஷாவுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளி பெண்களுக்கு திருமண நிதி உதவி
கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானியின் திருமணத்திற்கு முன்னதாக, அதானி குடும்பம் 'மங்கள் சேவா' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இது புதிதாகத் திருமணமான மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம். இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், இதுபோன்ற 500 மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இன்று, ஜீத் அதானி தனது வீட்டில், புதிதாகத் திருமணமான 21 மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் அவர்களது கணவர்களைச் சந்தித்து இந்த முயற்சியைத் தொடங்கி உள்ளார். புதிதாக திருமணம் ஆன மாற்றுத் திறனாளி பெண்களை அவர்கள் கணவருடன் அழைத்து விருந்தளித்துள்ளார் ஜீத் அதானி.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார் கௌதம் அதானி. தனது மகனின் இந்த செயலை பாராட்டியுள்ள கெளதம் அதானி, ஜீத் அதானி, பிறரது திருமணத்துக்கு உதவி செய்வது தனக்கு மனநிறைவை தருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம்
புதிதாக திருமணமான 500 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதன் மூலம் ஜீத்தும் திவாவும் 'மங்கள் சேவை'க்கு உறுதியளித்துள்ளதாக அதானி தெரிவித்துள்ளார். இந்த புனித முயற்சியின் மூலம், பல மாற்றுத்திறனாளி இளம்பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி அடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சேவையை ஜீத்தும் திவாவும் தொடர்ந்து மேற்கொள்ளவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது தாய் ப்ரீத்தி அதானி இயக்கி வரும் அதானி அறக்கட்டளையால் உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன் பெறுவதை பார்த்து ஈர்க்கப்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் இந்த திட்டத்தை ஜீத் அதானி செயல்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீத் அதானி - திவா ஷா ஜோடி
அதானி குழும நிறுவனர் கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் இந்தியாவில் உள்ள ஆறு விமான நிலையங்களை நிர்வகிக்கும் அதானி ஏர்போர்ட்ஸில் இயக்குநராக உள்ளார். அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். ஜீத் அதானி விமானியாக பயிற்சி பெற்றவர்.
ஜீத் அதானியின் வருங்கால மனைவி திவா ஜெய்மின் ஷா. இவர் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள். வைர வியாபாரத்தில் உலக அளவில் பெயர் பெற்றவர் ஜெய்மின் ஷா. ஜீத் அதானியின் மூத்த சகோதரர் கரண் அதானி, அதானி குழுத்தின் துறைமுக நிர்வாக நிறுவனத்தின் தலைவராக உள்ளார். அவர் பரிதி என்பவரை மணந்தார்.












Click it and Unblock the Notifications