For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யு.பி.எஸ்.சியின் CSAT தேர்வு: தமிழக மாணவர்களுக்கு பாதகமா? சாதகமா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: யூ.பி.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் கொண்டுவந்துள்ள சி சாட் (Civil Services Aptitude Test (CSAT) என்ற புதிய பாடத் திட்டம் இப்போது நாடுமுழுவதும் புயலைக் கிளப்பி வருகிறது.

யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வில் பொது அறிவுக்கு முக்கியத்துவம் அளித்து, விருப்பப் பாடத்தின் மதிப்பைக் குறைத்துவிட்டார்கள் என்பது மாணவர்களின் புகார்.

தமிழகத்தில் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் முதல்நிலைத் தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வலுவடைந்துள்ளது.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட 23 வகையான மத்திய அரசின் உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் நடத்தப்படும் இத்தேர்வு, முதல்நிலை, மெயின், நேர்காணல் என 3 நிலைகளைக் கொண்டது ஆகும். இந்த தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

முதல்நிலைத் தேர்வில் 2011-ம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, முன்பிருந்த விருப்ப பாடத்தாள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக சி-சாட் எனப்படும் சிவில் சர்வீஸ் திறனறிவுத் தேர்வு சேர்க்கப்பட்டது. மேலும், மதிப்பெண் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு பொது அறிவு தேர்வுக்கு 200 மதிப்பெண், சி-சாட் தேர்வுக்கு 200 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.

சி-சாட் தேர்வில் ஆங்கில மொழிக்கும், ஆராயும் திறனுக்கும் (ஆப்டிடியூட்) அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறி கிராமப்புற மாணவர்களும், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சி-சாட் தேர்வில் மாணவர்கள் பரிச்சயமாகும் வகையிலும், 2013-ல் மெயின் தேர்வில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தினாலும், இதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பில் 2 ஆண்டுகள் சலுகை அளிக்க முன்வந்தது. அந்த 2 ஆண்டு வயது சலுகையுடனே இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கிடையே, கிராமப்புற மாணவர்களும், இந்தி பேசும் மாநில மாணவர்களும் சி-சாட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த தேர்வை நீக்க வேண்டும் என்றும் வயது வரம்பு சலுகை 4 ஆண்டுகள் வழங்க வேண்டும் என்றும் கூறி டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பெரும் புயலைக்கிளப்பி வருகிறது. எதிர்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து ஒரு வாரத்தில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார். ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்படவில்லை. ஆனால் யுபிஎஸ்சி திறனறியும் தேர்வில் ஆங்கில மொழித் திறன் பிரிவில் பெறும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட தேர்வு முறைப்படி 2011-ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வெழுதியவர்களுக்கு அடுத்த ஆண்டு மீண்டும் அத்தேர்வை எழுத, கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு எதிர்க்கட்சியினரைத் திருப்திப்படுத்தவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.

சரத்யாதவ் கிளப்பிய விவகாரம்

நேற்று ஜீரோ ஹவரில் இப்பிரச்சினையை முதலில் எழுப்பிய ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், விரைவில் பிரச்சினையை தீர்ப்பதாக கூறிய அரசு தனது வாக்குறுதியை மறந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். எதிர்கட்சிகள் ஆதரவு சரத் யாதவுக்கு ஆதரவாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் பேசினர். தீர்வு காண்பதற்கு காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.

சமாஜ்வாதி கட்சி

சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்கோபால் யாதவ், "யுபிஎஸ்சி தேர்வு விவகாரத்தில் எப்போது பதில் அளிக்கப்படும் என்பதை அவையில் அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என துணைத் தலைவர் குரியனை கேட்டுக் கொண்டார். ஆனால், அவ்வாறு உத்தரவிட தனக்கு அதிகாரம் இல்லை என்று குரியன் மறுத்துவிட்டார். இதனால், அவை அலுவல்கள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகலில் அமைச்சர் பதில் ராஜ்யசபா பிற்பகல் 2 மணிக்குப் பிறகு யுபிஎஸ்சி தேர்வு விவகாரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் "2011-இல் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வெழுதிய ஆர்வலர்களுக்கு 2015-இல் தேர்வெழுத கூடுதலாக ஒரு வாய்ப்பளிக்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

தேர்ச்சிக்கான மதிப்பெண்

முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் பகுதியில் இடம்பெற்றுள்ள ஆங்கில திறனாய்வு தொடர்பான மதிப்பெண்களை தேர்வு எழுதியவரின் தேர்ச்சிக்கான மதிப்பீட்டு மதிப்பெண்ணுடன் சேர்க்க வேண்டாம் என்றும் அரசு கருதுகிறது' என்று கூறினார்.

மோடி ஆலோசனை

இந்நிலையில், நேபாளத்திலிருந்து திங்கள்கிழமை இரவு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் இந்தப் பிரச்னை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இன்றும் அமளி

இந்நிலையில் இவ்விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியினர் ராஜ்யசபா சபாநாயகருக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.

தொடர் அமளி

அவை தொடங்கியதும் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தனது நிலையை தெளிவுப் படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையை முடக்குவோம் இவ்விவகாரத்தில் அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சரியான முடிவு எடுக்கும் வரையில் அவையை செயல்பட விடமாட்டோம் என்று சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழில் தேர்வு

இதனிடையே யு.பி.எஸ்.சி தேர்வு விவகாரத்தை அதிமுக உறுப்பினர்கள் இன்றும் கையில் எடுத்தனர். யு.பி.எஸ்.சி முதனிலைத் தேர்விற்கான கேள்விகள் தமிழிழும் இடம்பெற வேண்டும் என்றும் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

சி-சாட் தேர்வின் அவசியம்

யு.பி.எஸ்.சி முதற்கட்டத் தேர்வில் சி-சாட் என்ற புதிய தாள் 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு முதற்கட்ட தேர்வில் ஒரு பொது அறிவுத் தாளும் ஒரு விருப்பப் பாடமும் இருக்கும். 2011-ம் ஆண்டு விருப்பப் பாடத்தை நீக்கிவிட்டு பொது அறிவுத் தாளில் இருந்த 150 கேள்விகளில் அப்ட்டியூட் பகுதியை தனியாகப் பிரித்து, அதோடு பத்தியை படித்துப் புரிந்துகொண்டு விடை அளித்தல், பிரச்னை தீர்த்தலும் முடிவு எடுத்தலும் ஆகியவற்றைச் சேர்த்து சி - சாட் உருவாக்கப்பட்டது.

மூன்று வருடங்களுக்குப் பின்

கடந்த மூன்று வருடங்கள் தேர்வு முடிந்துவிட்ட நிலையில், வட இந்தியாவில் இந்தத் தேர்வை எதிர்த்து தீவிரப் போராட்டம் தொடங்கியிருக்கிறது. இந்தி மொழிவழி படித்த மாணவர்களுக்கு இந்தத் தேர்வு எதிரானது போன்ற வாதம் எழுந்து உள்ளது. உண்மையில் 80 கேள்விகள் கொண்ட இந்தத் தாளில் 72 கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கொடுக்கப்படுகின்றன. வெறும் எட்டு கேள்விகள் மட்டும்தான் இந்தி மொழிபெயர்ப்பு இல்லாமல், ஆங்கிலத்தில் மட்டும் கொடுக்கப்படுகின்றன. இதையும் மாற்றக்கோரிதான் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

நிபுணர்கள் கருத்து

சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அணுகுவதற்கு வசதி இருக்கிறது. ஆனால், முதல்கட்டத் தேர்வில் அந்த வசதி இதுவரை வழங்கப்படவில்லை. இந்திய அரசு அமைப்பின் சட்டத்தில் 344 உறுப்பு, நாடாளுமன்ற அலுவல் மொழி ஆணையத்தின் பணிகளைப் பற்றி கூறும்போது, இந்தி பேசாத மக்கள் அரசுப் பணிக்கு வருவதற்கு உரிய மொழி சம்பந்தமான நியாயமான கோரிக்கைகளை பரீசிலிக்கப்பட வேண்டும் என்றும், அதே சமயத்தில் இந்தியாவின் தொழில், அறிவியல் மற்றும் கலாசார முன்னேற்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறது. எனவே, முதல்கட்டத் தேர்வுத்தாளை தமிழ் உள்ளிட்ட வட இந்திய மொழிகளிலும் கொடுத்தால் சிறப்பாகத்தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆங்கில மொழியறிவு

இப்போது சிசாட் தாளில் இந்தியில் மொழிபெயர்த்து கொடுத்துமே இந்தி மாணவர்களுக்கே பயனில்லை என்கிறபோது, ஆப்ட்டிட்யூட் கேள்விகளை தமிழில் கொடுத்தால் பெரிய பயன் கிடைத்துவிடுமா என்பதை இங்குள்ள மாணவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஏன் என்றால் ஆப்ட்டிட்யூட் தேர்வு என்பது மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறமை, சிந்திக்கும் ஆற்றல், எண்ண ஓட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதுதானே தவிர, மொழித் திறமையை அடிப்படையாகக்கொண்டது அல்ல என்பதை கவனிக்க வேண்டும்.

ஆங்கில பயிற்சி தேவை

கேள்விகளை தமிழில் வேண்டும் எனக் கேட்பது நமது உரிமை. ஆனால், தமிழகம் இருமொழிக் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றும் மாநிலமாக இருக்கும் சமயத்தில், நம் மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டால், மத்திய அரசு பணிக்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவிடும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களுக்கு இந்த மாற்றம் சிரமத்தை தரும். கிராமப்புற மாணவர்களுக்கும், தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் நல்ல ஆங்கில பயிற்சி அளித்தால் இந்த சிக்கலை சமாளிக்க முடியும் என்கின்றனர்.

தமிழக மாணவர்களுக்கு பாதிப்பா

அதேசமயம் முதல்நிலைத் தேர்வின் புதிய முறை வரவேற்கத்தக்கது என்கின்றனர் நிபுணர்கள். எனினும் இரண்டாம் தாள் முற்றிலும் தமிழக மாணவர்களுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. ஆங்கில அறிவை சோதிக்கும் வகையில் வெறும் 8 கேள்விகள்தான் உள்ளன. ஆனால், பொது அறிவு கேள்விகளை புரிந்து கொள்ள ஆங்கிலப் புலமை மிக மிக அவசியம். ஆனால், அந்தக் கேள்விகளுக்கு முற்றிலும் இந்தி அர்த்தத்துடன் கேள்விகள் அமைக்கப்பட்டிருப்பதுதான் தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பாக அமைகிறது என்கின்றனர்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம்

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் முதல்நிலைத் ரேத்வுதான் தடைக்கல். இதில் ஒருவர் தேர்ச்சிப் பெற்றுவிட்டால், எளிதாக மெயின் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, நேர்முகத் தேர்வுக்கு சென்றுவிடலாம். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.

தொடர்ந்து 3 வது இடம்

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் 2010-ல் 11 பேர், 2011-ல் 127 பேர், 2012-ல் 102 பேர், கடந்த ஆண்டில் 98 பேர் வெற்றி பெற்றனர். ஐஏஎஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுவோரின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய அளவில் 3-ம் இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் உத்தரப் பிரதேசம், 2-ம் இடத்தில் ராஜஸ்தான் உள்ளன.

வெற்றிக்கு தடைக்கல்

ஆனால், யு.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ள இந்த சிசாட் கேள்வித்தாள், இந்த வெற்றிப் படிக்கட்டுக்கு தடைக்கல்லை வைத்தது போல் மாணவர்கள் உணருகிறார்கள். எனவே மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

கனவு நனவாகுமா?

பல்லாயிர மாணவர்களின் லட்சியத் தேர்வாக விளங்குவது சிவில் சர்வீஸ் தேர்வு. தேசம் முழுவதும் பல்வேறு கனவுகளுடன் இத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேர்வை எல்லா மாணவர்களும், எதிர்கொள்ளும் வகையில் எவ்வித பாரபட்சமின்றி கேள்வித்தாளை வடிவமைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஐ.ஏ.எஸ். கனவு காணும் மாணவர்களின் கனவு.

English summary
Seeking to resolve the raging row over the UPSC civil services examinations, the BJP-led NDA government today announced in Parliament that English marks in CSAT-II will not be included for gradation or merit and that students who took the 2011 UPSC exams will get another shot at it next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X