மோடி சொன்னது எல்லாம் பொய்யா? குஜராத் தேர்தலில் பாஜகவில் அதிகரித்த வாரிசு அரசியல்.. இவ்வளவு பேரா?
காந்தி நகர்: பிரதமர் நரேந்திர மோடி வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு எதிராக பேசி வரும் நிலையில் அவரது சொந்த மாநிலமாக குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் ஏராளமான வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெற்றி என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு சமமாக பாஜகவிலும் அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 89 சட்டசபை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக டிசம்பர் 1ல் தேர்தல் நடைபெற உள்ளது.
அடுத்தக்கட்டமாக 93 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் போட்டியிட்டுள்ளன.

குஜராத் தேர்தல்
இருப்பினும் குஜராத் தேர்தலை பொறுத்தமட்டில் போட்டி நேரடி போட்டி என்பது பாஜக, காங்கிரஸ் இடையே தான் நடக்கிறது. இருப்பினும் டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் ஆம்ஆத்மியும் குஜராத்தில் களமிறங்கி உள்ளது. இந்த கட்சியும் ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான ஓட்டுக்களை கைப்பற்றலாம். இது நேரடியாக பாஜக, காங்கிரஸின் வெற்றி தோல்வி விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ஓட்டுக்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால் தான் காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி இடையே போட்டி நிலவி வருகிறது.

வாரிசு அரசியலுக்கு மோடி எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வாரிசு அரசியலுக்கும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும் பேசி வருகிறார். இதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களும் குடும்ப அரசியலை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் திமுக, தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய ஜனதாதளம், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காஷ்மீரில் உள்ள பரூக் அப்துல்லா கட்சி உள்ளிட்டவற்றை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

பாஜகவில் வாரிசு அரசியல்
இதற்கு போட்டியாக இந்த கட்சியை சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து பாஜகவில் உள்ள வாரிசு அரசியலை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சியில் வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வாரிசு அரசியலை எதிர்த்து பேசும் நிலையில் தான் பாஜகவில் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களின் மகன், மகள், மனைவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸிலும் இந்த நிலை தொடர்கிறது.

50 தொகுதிகளில் வாரிசுகள்
அதன்படி மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 50க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் கட்சி அரசியல்வாதிகளின் வாரிசுகள் களமிறங்கி உள்ளனர். போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையில் கூட வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு எதிராக பிரதமர் மோடி பேசிய நிலையில் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் தான் இந்த நிலை உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள தொகுதிகளில் பாஜக வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. இதனை மாற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களின் வாரிசுகளை அழைத்து வந்து பாஜக சீட் வழங்கி எதிர் வேட்பாளராக நிறுத்தி உள்ள சம்பவங்கள் நடந்துள்ளன.

வாரிசுகள் விபரம்
இவ்வறாக பாஜக சார்பில பல தொகுதிகளில் வாரிசுகள் களமிறக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய தொகுதிகளை நாம் கூறலாம். குஜராத் மாநிலம் தஸ்ரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராம்சிங் மகன் யோகேந்திர சிங் பர்மாரை பாஜக வேட்பாளராக நிறுத்தி உள்ளது. ராம்சிங் பலமுறை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்தார். தற்போதும் அங்கு செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் அவரது மகன் யோகேந்திர சிங் பர்மாருக்கு பாஜக சீட் வழங்கி உள்ளது. இவர் கடந்த முறை இந்த தொகுதியில் தோற்ற நிலையில் மீண்டும் போட்டியிட்டுள்ளார்.

10 முறை எம்எல்ஏவானவரின் மகன்
இதேபோல் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன சோட்டோ உதேபூரில் பாஜக சார்பில் ராஜேந்திரசிங் ரத்வா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரது தந்தை குஜராத்தின் 78 வயது நிரம்பிய மூத்த எம்எல்ஏவான மோகன்சிங் ரத்வா ஆவார். இவர் 10வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இந்நிலையில் தான் காங்கிரஸில் தனது மகனுக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் காங்கிரஸ் மறுப்பு தெரிவிக்கவே அவர் பாஜகவுக்கு தாவினார். இந்நிலையில் தான் ராஜேந்திர சிங் ரத்வாவின் மகனுக்கு பாஜக சீட் வழங்கி உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரசும் வாரிசு அரசியலை தான் கையில் எடுத்துள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பில் சங்கிராம் சிங் ரத்வா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை பெயர் நரண் ரத்வா. இவர் ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுராஷ்டிரா பகுதிகளில் வாரிசுகள்
இதேபோல் கடந்த முறை பாஜகவுக்கு சரிவை கொடுத்த சவுராஷ்டிரா பகுதி தொகுதிகளில் பாஜக அரசியல் வாரிசுகளை களமிறக்கி உள்ளது. அதன்படி காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏ பாகா பரத் தலாலா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது சகோதரர் காங்கிரஸில் மூத்த தலைவராகவும் ஜூனாகத் தொகுதி எம்பியாகவும் இருந்த நிலையில் மறைந்தார். மேலும் மானவதார் தொகுதி பாஜக வேட்பாளராக ஜவஹர் சாவ்தா அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்த இவர் கடந்த 2019ல் பாஜகவுக்கு தாவினார். இவரது தந்தை பெத்தல்ஜி சாவ்தா மிகவும் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் வாரிசுகள்
மேலும் தீசா சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் பிரவீன் மாலி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவரது தந்தை பாஜக எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சஞ்சய் தேசாய் களமிறக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை கோவாபாய் தேசாய் இந்த 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இதனால் தீசா தொகுதியில் பாஜக-காங்கிரஸ் என இரு கட்சியினருக்கும் இடையே வாரிசு அரசியல் தான் தொடர்கிறது.

மனைவிகளுக்கு வாய்ப்பு
மேலும் சில தொகுதிகளில் தலைவர்களின் மனைவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோண்டல் தொகுதியில் மாஜி எம்எல்ஏ ஜெய்ராஜ்சிங் ஜடேஜா கொலை வழக்கில் சிக்கிய நிலையில் தற்போது அவரது மனைவி கிதாபா ஜடேஜாவுக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. பாவ்நகர் கிழக்கு தொகுதியில், பாவ்நகர் நகர பாஜக தலைவராக இருக்கும் ராஜீவ் பாண்டியாவின் மனைவி செஜல்பென் பாண்டியாவை பாஜக நிறுத்தியுள்ளது.

காங்கிரஸை போல் பாஜக
இவ்வாறு குஜராத்தில் பல தொகுதிகளில் அரசியல் பிரபலங்களின் வாரிசுகள், மனைவிகள், குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. குஜராத்தில் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் உயர்பதவிகளில் இருந்த பாரத்சிங் சோலங்கி, சித்தார்த்த படேல், சக்திசிங் கோஹில் உள்ளிட்டவர்களின் குடும்பத்தினர் வாரிசு அரசியல் செய்வதாக பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது. ஆனால் தற்போது 27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி செய்யும் பாஜக சார்பிலும் வாரிசுகளுக்கு தேர்தலில் அதிகளவில் டிக்கெட் வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது.

காரணம் என்ன?
இதனால் தான் தற்போதைய குஜராத் அரசியல் களத்தில் பாஜகவின் வாரிசு அரசியல் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. இதுபற்றி பாஜக தலைவர்கள் கூறுகையில், ‛‛வேட்பாளர் தேர்வில் பல விஷயங்கள் பார்க்கப்படும். குறிப்பாக வெற்றி வாய்ப்பு என்பது முக்கியம். வாரிசாக இருந்தால் மட்டுமே அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அவர்களும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும் '' என கூறினார். இதுபற்றி காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டபோதும் கூட அவர்களும் பாஜகவினர் கூறியதையே தெரிவித்தனர். இந்நிலையில் சாமானிய மக்களோ, அரசியல் கட்சியினரை திருத்தவே முடியாது. இவர்கள் எப்போதும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக தான் இருக்கிறது எனக்கூறி நொந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications