ஸ்பைஸ்ஜெட்டை தொடர்ந்து இண்டிகோ.. தொழில்நுட்பக் கோளாறால் தரையிறங்கும் விமானங்கள்.. பீதியில் பயணிகள்!
கராச்சி: ஷார்ஷாவில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் சரியான நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிடுவோமா என்ற கேள்வியுடனேயே பயணித்து வருகின்றனர். அந்த அளவிற்கு தொழில்நுட்ப கோளாறுகளால், விமானங்கள் மீண்டும் தரையிறக்கப்பட்டு வருகின்றன.

ஸ்பைஸ்ஜெட் விமானம்
கடந்த மே 4ம் தேதி சென்னை முதல் துர்காபூர் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், வானில் பறந்துகொண்டிருந்த போது ஆயில் ஃபில்டர் பிரச்னைக் காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதேபோல் மே 28ம் தேதி மும்பை முதல் கோரக்பூர் சென்ற விமானம், 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

தொடரும் தொழில்நுட்பக் கோளாறு
இதேபோல் ஜூன் மாதத்தில் இரு முறையும், ஜூலை மாதத்தில் 3 முறையில் விமானம் பறந்தபோது தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. அதிலும் ஜூலை 5ம் தேதி ஒரே நாளில், டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குஜராத்தில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ விமானம்
இதேபோல் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் மட்டும் 8 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஷார்ஷாவில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதில் பயணித்த விமான ஊழியர்கள், பயணிகள் என யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களில், இரண்டாவது முறையாக இந்திய விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பாதிப்பு
அந்த விமானத்தில் இருக்கும் பயணிகளுக்காக இண்டிகோ விமானம் மாற்று விமானத்தை அனுப்பும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் டெல்லியில் இருந்து வதோதரா பயணித்த இண்டிகோ விமானம், தொழில்நுட்ப பிரச்னை காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் இரு விமானங்கள் பிரச்னையை சந்தித்த சம்பவம், அந்த நிறுவனம் மீது பயணிகள் வைத்துள்ள நம்பிக்கையை குலைத்துள்ளது.












Click it and Unblock the Notifications