For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் பதவி: அன்புமணி விரக்தி!… விஜயகாந்த் அதிருப்தி!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி அமைச்சரவையில் எப்படியும் அமர்ந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பாமகவும், தேமுதிகவும் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி முடிசூடி விட்டார். அவருடன் 23 கேபினட் மந்திரிகள், தனிப் பொறுப்புடன் கூடிய 10 இணைஅமைச்சர்கள் 12 இணை அமைச்சர்கள் என்று 45 பேர் மோடி அமைச்சரவையை அலங்கரிக்கிறார்கள்.

மோடி பதவி ஏற்பு விழா உலகமே கவனித்தது. சார்க் நாட்டுத் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து சொல்ல திரண்டிருந்தனர்.

அதே சமயம் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் அமைச்சர் பதவிக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பியது தெரியவந்துள்ளது.

கறுப்புக்கொடி வைகோ

கறுப்புக்கொடி வைகோ

மோடி பதவியேற்பு நாளில் ராஜபக்சே வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி ஏந்தினார் வைகோ. ஆனால் பாமகவும், தேமுதிகவும் இதை கண்டுகொள்ளாமல் விழாவில் பங்கேற்றனர். காரணம் தங்களின் விசுவாசத்தை பாஜகவிற்கு காட்டத்தானாம்.

அமைச்சரவையில் இடம்

அமைச்சரவையில் இடம்

மோடி தேர்தல் பிரசாரத்தின் போது, தனிப்பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றி பெறுவோம், இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிப்போம் என்று உறுதியளித்தார். மோடியின் இந்த அறிவிப்பால் கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்தன.

அமைச்சராவது உறுதி

அமைச்சராவது உறுதி

ஒரு வேளை மோடி அலையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் நமக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கூட்டணி கட்சி பிரபலங்கள் அடிமனதில் ஆசையுடன் இருந்தனர். மோடி சொன்ன வாக்கை காப்பாற்றுவார் மோடி என்ற நம்பிக்கையில் பல கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லி சென்று முகாமிட்டனர்.

ஐவருக்கு அமைச்சர் பதவி

ஐவருக்கு அமைச்சர் பதவி

அவர்களில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தெலுங்கு தேசத்தை சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ, சிவசேனாவை சேர்ந்த ஆனந்த்கீதே, அகாலிதளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத்கவுர், ராஷ்ட்ரீயலோக் சமதா கட்சியை சேர்ந்த உபேந்திர குஷ்வாகா ஆகிய 5 பேருக்கு மந்திரி பதவி வழங்கப் பட்டுள்ளது.

பாஜகவின் மூத்த முன்னணி தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த நடிகை ஸ்மிருதிஇரானிக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வீசிய மோடி அலையில் தமிழ் நாட்டிலும் அரசியல் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்த்து பாஜக தலைமையில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணியும் கணிசமான இடங்களை கைப்பற்றும் என்ற கனவுடன் இருந்தது. ஆனால் அது கனவாக வந்து கனவாகவே போய்விட்டது.

2 இடங்களில் வெற்றி

2 இடங்களில் வெற்றி

கன்னியாகுமரியில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் தர்மபுரியில் பாமகவின் அன்புமணி ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரிய மாநிலமான தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரே ஒரு எம்.பி இருப்பதால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி உறுதி என்று தேர்தல் முடிவு வெளியானதுமே எதிர்பார்க்கப்பட்டது.

மகனுக்கும் மச்சானுக்கும்

மகனுக்கும் மச்சானுக்கும்

அதே நேரத்தில் தர்மபுரியில் வென்ற அன்புமணியும், தோல்வியை தழுவிய சுதீசும் அமைச்சர் பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஏமாந்த பாமக

ஏமாந்த பாமக

அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் நேற்று முன்தினமே டெல்லி சென்று விட்டனர். பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவி வழங்கப்படுவதால் பா.ம.க.வுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். கேபினட் அந்தஸ்து கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இணை அமைச்சர் பதவியாவது கிடைத்தால் போதும் என்று பாஜக தலைமையை அணுகி இருக்கிறார்கள்.

மோடியின் முடிவுதான்

மோடியின் முடிவுதான்

அமைச்சரவையில் யார் யார் இடம்பெறவேண்டும் என்று 100 சதவிகிதம் மோடிதான் முடிவு செய்கிறார் என்று கூறிய ராஜ்நாத்சிங், அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

விசாரித்த ராமதாஸ்

விசாரித்த ராமதாஸ்

இதை தைலாபுரத்தில் இருந்து ராமதாஸ் லைவ் ஆக விசாரித்துக் கொண்டே இருந்தாராம். திங்களன்று மதியம் வரை பாஜகவிடம் இருந்து கிரீன் சிக்னல் வரவே இல்லையாம்.

ஊழல் வழக்கு

ஊழல் வழக்கு

அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது நடந்த முறை கேடுகள் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் இப்போது அமைச்சர் பதவி தர இயலாது. வழக்கு முடியட்டும் பின்னர் பரிசீலிக்கலாம் என்று பாஜக மேலிடம் கையை விரித்து விட்டதாக கூறப்படுகிறது.

எடியூரப்பா உதாரணம்

எடியூரப்பா உதாரணம்

சிபிஐ வழக்கு காரணமாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவையும் சுட்டிக்காட்டியுள்ளனர் பாஜக தலைவர்கள். இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவினரின் ஒத்துழையாமை, டாக்டர் ராமதாஸ், குரு ஆகியோர் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரசாரம் செய்யப் போகாதது ஆகியவை டெல்லி தலைவர்களுக்கு விலாவாரியாக தெரிந்துள்ளது. ஆனாலும் வழக்கை காரணம் காட்டித்தான் அன்புமணிக்கு செக் வைத்துள்ளனர்.

விரக்தியடைந்த அன்புமணி

விரக்தியடைந்த அன்புமணி

இது அன்புமணிக்கு ஏமாற்றத்தையும், ராமதாசுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே பாஜக கூட்டணிக்கு எள்ளளவு கூட விருப்பமில்லாத ராமதாசை சமாதானப்படுத்தி கூட்டணி கொடி பிடித்தவர் அன்புமணி எவ்வளவு சிரமப்பட்டு கூட்டணிக்கு முயற்சி எடுத்தேன் என்பது தெரிந்தும் பாஜக நம்மை கை விட்டு விட்டதே என்ற விரக்தியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

நம்பிக்கையில் கேப்டன்

நம்பிக்கையில் கேப்டன்

தேமுதிக தலைவர் விஜயகாந்தோ, தனது மைத்துனர் சுதீசுக்கு அமைச்சர் பதவி அல்லது ராஜ்யசபா எம்.பி.பதவி வேண்டும் என்று பாஜக தலைமையை வலியுறுத்தி இருக்கிறார். கண்டிப்பாக ஏதாவது பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விஜயகாந்த் இருந்தார்.

புறக்கணித்த விஜயகாந்த்

புறக்கணித்த விஜயகாந்த்

எனவே பதவி ஏற்பு விழாவுக்கு மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீசுடன் நேற்று காலையில் டெல்லி புறப்பட்டு சென்றார். பிற்பகல் வரை பதவி பற்றி அறிவிப்பு வராததால் பதவி ஏற்பு விழாவுக்கு செல்லாமல் ஹோட்டலிலேயே இருந்து விட்டார். பதவி வழங்காததால் விஜயகாந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மோடியை நம்பினோர்

மோடியை நம்பினோர்

இது குறித்து தமிழக பாஜக நிர்வாகிகளிடம் கேட்டபோது, மோடியை நம்பியவர்கள் கைவிடப்படமாட்டார்கள். மோடி ஒரு முறைக்கு பலமுறை யோசித்து தான் எந்த முடிவையும் எடுப்பார். அவர் எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருக்கும். அமைச்சரவை விரிவாக்கத்தில் மேலும் பலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கின்றனர்.

மோடியின் மனதில் என்ன இருக்கிறது என்பதுதானே சஸ்பென்ஸ்!

English summary
PMK’s Anbumani Ramadoss, who was the only other NDA candidate to win his Lok Sabha bid in the State, is unlikely to get a Cabinet berth because of a CBI case against him. Modi is also unlikely to spare Rajya Sabha seats for MDMK chief Vaiko or the DMDK, according to sources in the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X