ஆந்திரா 'ரத்த சரித்திரம்’ விவேகானந்தா ரெட்டி கொலை: ”கடப்பா”வை கைப்பற்ற போராடும் ஜெகன் தங்கை ஷர்மிளா!
கடப்பா: ஆந்திரா லோக்சபா தேர்தலில் கடப்பா தொகுதியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா களம் காண்கிறார். ஆந்திராவையே அலற வைத்த விவேகனந்தா ரெட்டி கொலையை ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்துள்ளார் ஒய்.எஸ்.ஷர்மிளா.
ஆந்திரா சட்டசபை மற்றும் ஆந்திராவின் 25 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் மே 13-ந் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திராவில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜெகன் சகோதரி ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ்-இடதுசாரிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா ஆகியவை களம் காண்கின்றன.

ஒய்.எஸ்.ஆர். குடும்பத்தின் கோட்டை கடப்பா: ஆந்திரா லோக்சபா தேர்தலில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது கடப்பா தொகுதி. ஆந்திரா அரசியலில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கோட்டை கடப்பா. 1989, 1991, 1996, 1998-ல் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. 1999, 2004-ல் அவரது சகோதரர் விவேகானந்த ரெட்டி எம்பியானார். 2009-ல் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி (தற்போதைய முதல்வர்) இதே தொகுதியில் எம்பியானார். தற்போது இத்தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருப்பவர் ஒய்.எஸ் அவினாஷ் ரெட்டி.
காங்கிரஸ் வேட்பாளராக ஜெகன் தங்கை ஷர்மிளா: 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா களம் காண்கிறார். இத்தொகுதியில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் அவினாஷ் ரெட்டி போட்டியிடுகிறார்.
ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் கத்தியால் குத்திக் கொலை… ஆந்திராவில் பரபரப்பு
சித்தப்பா விவேகானந்த ரெட்டி படுகொலை: கடப்பா தொகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவை குலைநடுங்க வைத்த ஒய்.எஸ்.ஆர்.குடும்ப அரசியல் கொலையை கையில் எடுத்துள்ளார் ஷர்மிளா. 2019-ம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி- ஷர்மிளா ஆகியோரது சித்தப்பா ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜெகன் மோகன் முதல்வரான பின்னர் விவேகானந்த ரெட்டி படுகொலை வழக்கில் தொய்வு ஏற்பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சிட்டிங் எம்பியும் ஜெகன், ஷர்மிளா உறவினருமான அவினாஷ் ரெட்டியின் உதவியாளர் கஜாலா உள்ளிட்டோரை விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் கைது செய்தது சிபிஐ. பின்னர் அவினாஷ் ரெட்டியின் தந்தையான ஜெகன் -ஷர்மிளா குடும்பத்தைச் சேர்ந்த பாஸ்கர ரெட்டியும் கைது செய்யப்பட்டார். இதனால் சிபிஐ-ன் பிடி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நோக்கி நகர்ந்தது.
நீதி கேட்கும் ஷர்மிளா: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கடப்பா தொகுதி எம்பி சீட்டை அவினாஷ்க்கு தரவே கூடாது என முட்டுக் கட்டை போட்டவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்தா ரெட்டி. அவினாஷ்க்கு பதில் ஜெகன் சகோதரி சர்மிளா, ஜெகன் அம்மா உள்ளிட்ட ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என குடும்பத்தில் போராடியவர் விவேகானந்தா ரெட்டி. இதனால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போத் விவேகானந்த ரெட்டியின் படுகொலைக்கு நீதி கேட்கும் வகையில் ஒய்.எஸ்.ஷர்மிளா பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். வேட்பு மனுவைத் தாக்கல் செய்த ஷர்மிளா, தந்தை ராஜசேகர ரெட்டி, கொலை செய்யப்பட்ட சித்தப்பா விவேகானந்த ரெட்டியை கடப்பா மக்கள் மறந்து விடக் கூடாது என கேட்டுக் கொண்டே பிரசாரத்தைத் தொடங்கினார். கடப்பா தொகுதியில் விவேகானந்த ரெட்டியின் படுகொலை பெரும் பிரளயத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications