ஷாக் வீடியோ.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால்.. செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர்!
அமராவதி: தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர் ஒருவர் தன்னை தானே சபையில் அடித்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினத்தில் நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியில் முலபர்த்தி ராமராஜூ என்பவர் கவுன்சிலராக உள்ளார்.
40 வயது நிரம்பிய இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இந்த வேளையில் தான் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலரானார்.

தேர்தல் சமயத்தில் முலபர்த்தி ராமராஜூ தான் வெற்றி பெற்றால் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக தெரிவித்து இருந்தார். ஆனால் கவுன்சிலரான நிலையில் அவர் தனது வார்டில் உள்ள வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், சாலை வசதி செய்து கொடுக்கவும் நகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நகராட்சி தலைவர் சார்பில் அவரது வார்டில் மேம்பாட்டு பணிகள் செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால் முலபர்த்தி ராமராஜூ கவலையடைந்தார். இத்தகைய சூழலில் தான் நேற்று நகராட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முலபர்த்தி ராமராஜூ பங்கேற்று பேசினார். அப்போது தனது வார்டில் உள்ள மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசி வருத்தமடைந்தார். மேலும் தேர்தல் சமயத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முயன்றாலும் நகராட்சி நிர்வாகம் அதற்கு செவிசாய்க்கவில்லை என கவலை தெரிவித்தார்.
இப்படி அவர் பேசி கொண்டிருந்தபோதே திடீரென்று தனது செருப்பை எடுத்து கன்னத்தில் அடித்து கொண்டார். மக்களுக்கு நல்லது செய்ய மனம் இருந்தும் தன்னால் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் நகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கண்ணீர் சிந்தியடி முலபர்த்தி ராமராஜூ அங்கிருந்து வெளிநடப்பு செய்தார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‛‛நான் கவுன்சிலராக தேர்வாகி 31 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் வார்டுக்கு கழிவுநீர் கால்வாய், மின்சாரம், ரோடு, குடிநீர் உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியவில்ல. இதனால் செருப்பால் அடித்து கொண்டேன்'' என்றார். இதற்கிடையே தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் முலபர்த்தி ராமராஜூ செருப்பால் அடித்து கொண்டது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications