திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு பிரியங்கா ஆலோசகர் ஆச்சார்யா வேட்டு? உதயநிதியை டிஸ்மிஸ் செய்யனுமாம்!
ஹரித்வார்: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சர பதவியில் இருந்து நீக்க வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார் பிரியங்கா காந்தியின் அரசியல் ஆலோசகர் எனப்படும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம்.
ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ண்ம் கடந்த சில நாட்களாக ஹரித்வாரில் முகாமிட்டு பல்வேறு சாமியார்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஹரித்வார் சேதன் ஜோதி ஆசிரமத்துக்கு சென்ற ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் செய்தியாளர்களை சந்தித்தார்.

ராவணன் பரம்பரை: ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆச்சார்ய பிரமோத், ராவணன் பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான் சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்கள். சனாதன தர்மத்தை எதிர்க்கும் கட்சிகளை "இந்தியா" கூட்டணியில் இருந்து தூக்கி எறிய வேண்டும். சனாதன தர்மத்தின் பக்கம் நிற்கப் போகிறீர்களா? அல்லது சனாதன தர்மத்துக்கு எதிராக நிற்கப் போகிறீர்களா? என்பதை முடிவு செய்யும் தருணம் இது என்றார்.
உ.பி.யில் சமாஜ்வாதி தோற்கும்: மேலும் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் சனாதன தர்மத்தின் பக்கம், கடவுள் ராமரின் பக்கம் நிற்க வேண்டும். இல்லையெனில் 2024 லோக்சபா தேர்தலில் உ.பி.யில் "இந்தியா" கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவும் எனவும் ஆச்சார்யா எச்சரித்திருந்தார்.
தே.பா. சட்டம் பாயனும் தடை செய்யனும்: ஹரித்வார் பரத் சாது சமாஜ் சென்றும் ஆலோசனை நடத்தினார் ஆச்சார்ய. அப்போது பரத் சாது சமாஜ் செய்தித் தொடர்பாளர் ஸ்வாமி ரிஷிவர்னானந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்கள் மீது தேசப் பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும். இத்தகைய அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்றார்.
டிஸ்மிஸ் செய்க: இதனிடையே இன்று ஹரித்வாரில் மீண்டும் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, சனாதனத்தை இழிவுபடுத்துவது என்பது மதச்சார்பின்மை அல்ல. இந்த நாட்டு மக்களை அவமதிப்பதுதான் காயப்படுத்துவதுதான் சனாதனத்துக்கு எதிரான குரல். சனாதன தர்மத்தை எதிர்ப்பது ஒரு பேஷனாகிவிட்டது. சமாஜ்வாதி கட்சியினர் எதிர்க்கின்றனர்; இப்போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவர்கள் அத்தனை பேரும் அரசியல் சாசனத்தின் பெயரால் உறுதி மொழி எடுத்துக் கொண்டவர்கள்தான். இப்படி சனாதனத்தை இழிவுபடுத்துகிறவர்களை அமைச்சர் பதவிகளில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம்.












Click it and Unblock the Notifications