டிஸ்டன்ஸ்தான் காரணம்.. நேபாளத்தை தூக்கி இங்க வச்சிருந்தா! வடிவேலு பாணியில் பீகார் பாஜக துணை முதல்வர்
பாட்னா: நமது அண்டை நாடான நேபாளத்தில் மிகப் பெரிய குழப்பம் நிலவுகிறது. அங்கு வன்முறை போராட்டங்களும் பெரியளவில் வெடித்துள்ளன. இதற்கிடையே நேபாளத்தில் குழப்பம் ஏற்படக் காங்கிரஸ் கட்சியே காரணம் எனப் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறியுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. நேபாளம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் அமைதி நிலவியிருக்கும் என அவர் கூறியுள்ளார்.
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக மிக மோசமான வன்முறை நடந்து வருகிறது. அங்கு சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஆரம்பித்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. நிலைமை மிக மோசமாகப் போனதால் அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

நேபாள வன்முறை
அதன் பிறகு இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக அங்குப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், இன்னுமே அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை. அந்நாட்டு போலீசாரால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாததால் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு நிலைமை கையை மீறிப் போய்விட்டது. இதற்கிடையே நேபாள வன்முறைக்குக் காங்கிரஸ் தான் காரணம் எனப் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் தான் காரணம்
நேபாளம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் நாட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவியிருக்கும் என்ற சாம்ராட் சவுத்ரி, நேபாளத்தில் தற்போதைய நிலைமைக்குக் காங்கிரஸ் தான் காரணம் என்றார். அவர் மேலும் கூறுகையில், "நேபாளத்தில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் காங்கிரஸின் தவறு தான் காரணம். காங்கிரஸ் இப்படி நாடுகளைப் பிரித்ததால் தான் வன்முறை நிலவுகிறது. நேபாளம் இன்று இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால், அங்கு அமைதியும் மகிழ்ச்சியும் இருந்திருக்கும்" என்று சவுத்ரி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு அரசு மீது பொதுமக்களிடையே அதிருப்தி இருக்கலாம்.. ஆனால், அது வன்முறையாக மாறக்கூடாது.. அராஜகத்திற்கு இடமிருக்கக்கூடாது. இன்று நேபாளம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால், அதுவும் செழித்திருக்கும். பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால், அதுவும் இன்று இந்தியாவைப் போலவே செழித்திருக்கும். இதான் தான் இது காங்கிரஸின் தவறு என்கிறேன். இப்போது இவ்வளவு சிக்கல் ஏற்பட அதுவே காரணம்" என்றார்.
காங்கிரஸ் பதிலடி
சாம்ராட் சவுத்ரியின் இந்த கருத்து பேசுபொருளான நிலையில், இதற்குக் காங்கிரஸின் பவன் கேரா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர், "வரலாற்றைப் படிப்பதற்குப் பதிலாகக் கதைகளை படிப்போர் தங்களை முழு கோமாளிகளாக ஆக்கிக் கொள்கிறார்கள். வரவிருக்கும் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, இந்த நபர் அண்டை நாடுகளை இணைத்துக் கொண்டு, இன்னும் நிறையக் கதைகளைச் சொல்லலாம். தன்னை தானே சாணக்கியர் எனச் சொல்லிக் கொள்ளும் அவரின் தலைவரையும் உடன் அழைத்துச் செல்லலாம்" என்றார்.
பின்னணி
நேபாளத்தில் கடந்த சில காலமாகவே பொருளாதார சிக்கல் இருந்து வந்தது. இதனால் அங்கு வேலையின்மையும் அதிகரித்திருந்தது. இதனால் மக்களிடையே அதிருப்தி நிலவி வந்தது. இந்தச் சூழலில் தான் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எல்லா கோபங்களும் பீரிட்டு வரத் தொடக்கப் புள்ளியாக அமைந்துவிட்டது. போராட்டம் வன்முறையாக மாறியிருக்கும் சூழலில், அதைச் சமாளிக்க இப்போது ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், அது அமைந்த பிறகு நிலைமை மெல்லக் கட்டுக்குள் வரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications