பூரி ஜெகந்நாதரையே இழிவுபடுத்திருச்சு பாஜக.. ஒடிஷாவில் பிளேட்டை திருப்பி அடித்த ராகுல் காந்தி!
புவனேஸ்வர்: பூரி ஜெகந்நாதரை மோடியின் பக்தர் என பேசி கடவுளையே இழிவுபடுத்திய கட்சிதான் பாஜக என ஒடிஷா தேர்தல் பிரசாரத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி. இதில் பிரதான போட்டி பிஜூ ஜனதா தளம், பாஜக இடையேதான்.

ஒடிஷாவில் லோக்சபா தேர்தலிலும் சட்டசபைத் தேர்தலிலும் ஆளும் பிஜூ ஜனதா தளம்தான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பது பொதுவான ஆரூடம். ஆனால் பாஜகவோ ஒடிஷாவில் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்கிறது.
ஒடிஷாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எல்லா வழிகளையும் கையிலெடுத்தது பாஜக. ஒரு கட்டத்தில் பூரி ஜெகந்நாதரையே பிரதமர் மோடியின் பக்தர்தான் என பேசியது பாஜக. இது ஒடிஷாவின் பூரி ஜெகந்நாதர் பக்தர்களை பெருமளவில் கொந்தளிக்க வைத்தது. அயோத்தி ராமர் எப்படி தரப்புக்கு பெருமிதமோ அதேபோல பூரி ஜெகந்நாதர், ஒடிஷா மக்களுக்கு முதன்மை கடவுள்.
இதனைத் தொடர்ந்து பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல சாவி தமிழ்நாட்டில் பதுக்கி வைத்து விட்டனர் என பிரதமர் மோடி பேசியதையும் ரசிக்கவில்லை. ஒடிஷாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விகே பாண்டியன் ஆட்சி செய்ய நினைக்கலாமா? என அமித்ஷா கேள்வி கேட்டதையும் அந்த மக்கள் ஏற்கவில்லை.
இந்த நிலையில் ஒடிஷாவில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பூரி ஜெகந்நாதரை இழிவுபடுத்திய ஒரே கட்சி பாஜகதான். பிரதமர் மோடியின் பக்தர்தான் பூரி ஜெகந்நாதர் என பேசியிருப்பது கடவுளை இழிவுபடுத்துவதாகும். அதேபோல ஒவ்வொரு ஒடிஷா மக்களையும் பாஜக அவமானப்படுத்தி வருகிறது.
நமது நாட்டின் அரசியல் சாசனத்தை அழிக்க எந்த ஒரு சக்தியாலும் முடியாது. அரசியல் சாசனத்தை அழிக்கும் எண்ணத்துடன் உங்களால் அதை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications