நாட்டை விற்கும் மோடி அரசு.. 2024 தேர்தலில் பாஜக விரட்டியடிக்கப்படும்.. மம்தா பானர்ஜி பரபர பேச்சு
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டை விற்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மக்களால் விரட்டியடிக்கப்படுவது உறுதி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆக்ரோஷமாக பேசினார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ளது.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுக்கூறும் வகையில் இன்று தியாகிகள் தின பேரணி கொல்கத்தாவில் நடைபெற்றது.

மம்தா பானர்ஜி பேச்சு
இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த பேரணியை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது:

2024ல் விரட்டியடிக்கப்படும் பாஜக
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி மேற்கொள்கிறது. மேற்கு வங்கத்தில் நம்மை தோற்கடிக்க பாஜக முயன்றது. ஆனால் அவர்களால் முடியவில்லை. ஏனென்றால் பாஜகவை எதிர்த்து போராடும் முதுகெலும்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகளாக அமலாக்கப்பிரிவு, சிபிஐ ஆகியவற்றை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டும் செயலில் ஈடுபடுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடும் பாஜக 2024 தேர்தலில் விரட்டியடிக்கப்படும்.

எளிய மக்களுக்கும் ஜிஎஸ்டி
சிறிய பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கும் இன்றைய நாளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளியும் கூட ஜிஎஸ்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அரிசி, தயிர் உள்ளிட்டவற்றுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் எதனை தான் சாப்பிட முடியும்? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை மக்கள் எளிமையான உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவார்கள். தற்போது அதற்கும் பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

பொருளாதார சீர்குலைவு
இந்தியாவின் பொருளாதாரத்தை மத்திய பாஜக அரசு சீரழித்துவிட்டது. மேலும் அன்றாட மக்கள் பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலைகள் விண்ணை தொட்டுள்ளன. இதனால் பாமர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் மீதான அச்சுறுத்தலை காட்டும் வகையில் அமைந்துள்ளது.

நாட்டை விற்கும் மோடி அரசு
பிரதமர் மோடி அரசானது ஏர் இந்தியா, கோல் இந்தியா, ரயில்வே உள்ளிட்ட நிறுவனங்களை விற்பனை செய்து வருகிறது. மத்திய அரசின் முக்கிய கொள்கை என்பது நாட்டை விற்பதாகவே உள்ளது. இது தற்போது ராணுவத்திலும் எதிரொலிக்கிறது. ராணுவ கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் சேர்ந்து ஆட்சி
நாட்டில் ஒரே ஒரு மதச்சார்பற்ற கட்சி ஒன்று இருக்கும் எனில் அது திரிணாமுல் காங்கிரஸாக தான் இருக்கும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. இந்த வேளையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும். இது நடக்கும்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உச்சத்துக்கு செல்லும் என்பது எனது நம்பிக்கை'' என்றார்.












Click it and Unblock the Notifications