காவிரி: தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக பற்ற வைத்த நெருப்பு.. 2-ம் நாளாக கர்நாடகாவில் வெடித்த போராட்டம்!
மாண்டியா: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா விவசாயிகள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர். மாண்டியாவில் மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையை மறித்து இன்று போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய நீர் முழுமையாக திறந்துவிடப்படவில்லை. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால் காவிரியில் சொற்ப நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதேபோல கர்நாடகாவும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இவ்வழக்கு விசாரணை வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே கர்நாடகாவில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கர்நாடகா முன்னாள் முதல்வர்களான பாஜகவின் பசவராஜ் பொம்மை, மஜதவின் குமாரசாமி ஆகியோர் ஆளும் கர்நாடகா காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும்
மாண்டியாவில் நேற்று பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்றும் மாண்டியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மாண்டியாவில் ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தவும் முயன்றனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
#WATCH | Karnataka | A scuffle breaks out between farmer associations and Police in Mandya. The protesters are being detained by Police.
— ANI (@ANI) August 22, 2023
Famers associations have given a call to block the Bengaluru-Mysuru express highway and stage a protest opposing releasing of river Cauvery's… pic.twitter.com/R2mz45eQoB
முன்னதாக, தமிழ்நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டோம். வறட்சிக் காலத்தில் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக புதிய வழிமுறைகள் தேவைப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த கர்நாடகாவில் அனைத்து கட்சிக் கூட்டம் நாளை நடைபெறும் என அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்தியிருப்பது இரு மாநிலங்களிலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications