கொல்கத்தா பாலியல் குற்றவாளிகளுக்கு உடந்தை? கல்லூரி முன்னாள் டீன், போலீஸ் அதிகாரியை தூக்கியது சிபிஐ!
கொல்கத்தா: பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், எப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் செய்தது மற்றும் ஆதாரங்களை அழித்ததற்காக ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல்துறை அதிகாரி அபிஜித் மண்டல் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த கொலை வழக்கில் நீதி கோரியும், பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவர்களும் பொதுமக்களும் மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி மருத்துவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சந்தீப் கோஷ், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுஹிர்தா பால் உட்பட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். நிதி முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்தீப் கோஷ் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்நிலையில், கொலை வழக்கில் மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ், தலா காவல் நிலைய அதிகாரி அபிஜித் மண்டல் உள்ளிட்டோரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. இவர்கள் மீது ஆதாரங்களை அழித்தல், மோசடி ஆவணங்களை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 9 அன்று பெண் பயிற்சி மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஆடிட்டோரியம் பகுதிகளை, அடுத்த நாளே சுத்தப்படுத்த கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் உத்தரவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அமைச்சரும் மேற்கு வங்க பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார், சந்தீப் கோஷ் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் கடிதத்தைப் பகிர்ந்தார். குற்றம் நடந்த இடத்தில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தாமதம் செய்ததாக போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் தான் தலா காவல் நிலைய அதிகாரி அபிஜித் மண்டலும் சிபிஐ அதிகாரிகளால் நேற்று (செப்டம்பர் 14) கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications