
இனி எல்லாமே கார்டுதான்... பணப் பரிவர்த்தனைக்கான "ஸ்வைப்பிங்" மெஷினுக்கு 12.5% வரி விலக்கு!
டெல்லி: ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தாமல், வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணப் பரிவர்த்தனை நடைபெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பாயிண்ட் ஆப் சேல் கருவிக்கு வரி விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்த பின்னர், பொதுமக்களிடம் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதே அரிதாகிவிட்டது. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே ஏடிஎம் மற்றும் வங்கிகளில் கிடைக்கிறது. இதனால் மக்கள் சில்லறை நோட்டுக்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால், வணிக நிறுவனங்கள் பாயிண்ட் ஆப் சேல் என்ற பணப்பரிவர்த்தனைக்கு தேவையான சிறிய அளவிலான கருவியை பயன்படுத்துகின்றனர். இந்த சிறிய கருவியின் மூலம் கிரெடிட், டெபிட் கார்ட்டுகளை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனையை செய்ய கொள்வது எளிது. ஆனால் இந்த வகை கருவிகள், பெரிய வணிக நிறுவனங்களில் இருக்குமே தவிர, சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களில் இருக்காது. இன்னும், அழுகும் பொருட்களான பூ, காய்கறி வியாபாரிகள் இதனை பயன்படுத்துவதில்லை.
ஆனால், இந்தியாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டு தட்டுப்பட்டால், இந்தக் கருவியை பயன்படுத்தும் நிலைக்கு சாதாரண வியாபாரிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, 12.5 சதவீத உற்பத்தி வரியில் இருந்தும், 4 சதவீத சிறப்பு கூடுதல் வரியில் இருந்தும் பாயிண்ட் ஆப் சேல் கருவிக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதன்படி, பாயிண்ட் ஆப் சேல் கருவி உற்பத்திக்கு தேவையான அனைத்து மூலப் பொருட்களுக்கும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, உற்பத்தி வரியில் இருந்தும், சுங்க வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பையடுத்து, பாயிண்ட் ஆப் சேல் கருவியின் விலை 16.5 சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது. இதனால் அதிக அளவில் வணிகர்கள் இதனை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.