மனைவியிடம் கணவர் கட்டாயமாக உறவு வைத்தால் பாலியல் வன்கொடுமை ஆகாது.. சத்தீஷ்கர் நீதிமன்றம் தீர்ப்பு!
ராய்ப்பூர்: விருப்பம் இல்லாத மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொண்டாலும் அது தவறில்லை என்று சத்தீஷ்கர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
விருப்பம் இல்லாத மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொள்வது இந்தியாவில் சாதாரணமாக உள்ளது. இது காலம், காலமாக பல தரப்பிலும் விவாத பொருளாக இருக்கிறது.
பாலியல் தொடர்பான விஷயங்களில் கணவர் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வருகின்றன. விருப்பம் இல்லாமல் மனைவியிடம் கணவர் உடலுறவு கொள்வது தவறுதான் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகின்றன.

நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு
நிலைமை இப்படி இருக்க கணவர் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டாலும் அது தவறாகாது என்று சத்தீஷ்கர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. திருமணம் செய்து கொண்ட பிறகு தனது கணவரின் குடும்பம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், தனது கணவர் தன்னை கட்டாயப்படுத்தி தனது விருப்பத்துக்கு மாறாக உடலுறவு கொள்வதாகவும், தனது எதிர்ப்பையும் மீறி தகாத முறையில் உறவில் கொடுமைபடுத்துவதாகவும் சத்தீஷ்கர் நீதிமன்றத்தில் ஒரு பெண் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இது பாலியல் பலாத்காரம் இல்லை
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சட்டப்படி திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு வலுக்கட்டாயமாக இருந்தாலும் அல்லது மனைவியின் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது

சுட்டிக்காட்டிய நீதிபதி
கணவராக இருப்பதால் அவர் சட்டவிரோதமான காரியத்தைச் செய்ததாகக் கூற முடியாது என்று கூறிய நீதிமன்றம், இந்த மாத தொடக்கத்தில் கணவர் தனக்கு எதிராக உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டிய ஒரு பெண்ணின் புகார் மும்பை நீதிமன்றத்தில் சட்டரீதியான விசாரணைக்கு நிற்கவில்லை என்று மனுவை விசாரித்த நீதிபதி சுட்டிக்காட்டினார்.

பலரும் கண்டனம்
புகார் கொடுத்த பெண் ஒன்றும் 15 வயதுக்கு உட்பட்டவர் அல்ல என்று கூறிய நீதிபதி இந்த வழக்கில் இருந்து அவரது கணவரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார். சத்தீஷ்கர் நீதிமன்றத்தின் இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றமே இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி இருப்பது முறையல்ல என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications