
ராமன் அவமதிப்பு.. பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துக்கு தடை..அயோத்தி ராமர் கோவில் தலைமை குரு போர்க்கொடி
அயோத்தி: ராமாயண கதையின் அடிப்படையில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஆதிபுருஷ். இதன் டீசர் சர்ச்சையில் சிக்கிய நிலையில் படத்தை திரையிடாமல் தடை செய்ய வேண்டும் என உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு சத்தியேந்திர தாஸ் கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் புகழ் பெற்றார்.
அதன்பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ராதே ஷியாம்', 'சாஹோ' படங்கள் வெற்றி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ராமாயண கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி விமர்சித்த ராமர் பாலம் உண்மையா? கட்டுக்கதையா? பரபரப்பை கிளப்பும் ராம் சேது டீசர் ரிலீஸ்

ஆதிபுருஷ் படத்தின் கதாபாத்திரம்
இந்த படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கி உள்ளார். படத்தில் நடிகர் பிரபாஸ், கிருத்தி சனான், சாய்ப் அலி கான், சன்னிசிங் உள்பட ஏராளாமனவர்கள் நடித்துள்ளனர். படத்தில் ராமர் குறிக்கும் வகையிலான கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். கிருத்தி சனான் சீதையாவும், சாய்ப் அலி கான் ராவணனாகவும், சன்னிசிங் அனுமனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியானது.

ட்ரோல் செய்த நெட்டிசன்கள்
ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட கதைக்களம் என்பதால் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் டீசர் வெளியிடப்பட்டது. படத்தில் உள்ள காதபாத்திரங்களின் டீசர் காட்சிகள் அனிமேஷன் கதாபாத்திரங்களை விட மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் இணையதளத்தி்ல் இந்த படத்தின் டீசர் மீம் கண்டென்டாக மாறிப்போனது. மேலும் ட்ரோல் மெட்டிரீயலாக நெட்டிசன்கள் மாற்றினர்.

அவமதிப்பு-பாஜக எதிர்ப்பு
இதற்கு மத்தியில் அனுமன் கதாபாத்திரம் அவமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது அனுமன் கதாபாத்திரத்துக்கு தோல் ஆடைகள் அணிவிக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். அதோடு படத்தை வெளியிடக்கூடாது என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதாக், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை நீக்க வேண்டும்.இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அயோத்தி தலைமை குரு பேட்டி
இந்நிலையில் தான் ஆதிபுருஷ் படத்தை வெளியிடக் கூடாது. அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர், அனுமன், ராவணன் ஆகியோரின் கதாபாத்திர சித்தரிப்பு என்பது இதிகாசத்துடன் தொடர்பின்றி உள்ளது. இது அவர்களின் கண்ணியத்தை சீர்க்குலைக்கும் நோக்கில் இருக்கிறது.

தடை செய்ய வேண்டும்
திரைப்படம் எடுப்பது என்பது தவறில்லை. ஆனால் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி விளம்பரம் தேடக்கூடாது. இதனால் படத்தை தடை செய்ய வேண்டும்'' என்றார். பொங்கலையொட்டி இந்த படத்தை நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தான் தொடர்ந்து படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.