ஆப்கனின் டிரில்லியன் டாலர் கனிமங்கள்.. சீனா போட்டுள்ள 'மாஸ்டர் பிளான்' -தாலிபானை நம்புவது பலன் தருமா

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கனில் பொருளாதாரம் இப்போது மோசமாக உள்ளதால், நாட்டை மீண்டும் கட்டமைக்க உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தாலிபான்கள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சுமார் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமங்களைக் கைப்பற்றச் சீன திட்டமிட்டுக் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கன் மீது அமெரிக்கா தனது தாக்குதலைத் தொடங்கிய போது உலகம் இப்போது இருந்ததைப் போல இருக்கவில்லை. பருவ நிலை மாற்றத்தால் உலகம் அப்போது பெரிய பேரழிவுகளைச் சந்திக்கத் தொடங்கவில்லை.

உலகம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர முக்கிய சாதனங்களாக உள்ள டெஸ்லா கார்கள், ஐபோன்கள் என எந்தவொரு அதிநவீன கருவிகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது இது போன்ற சாதனங்களை உற்பத்தி செய்ய தாதுகள் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இதற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறீர்களா!

40 ஆண்டுகளாகப் போர்

40 ஆண்டுகளாகப் போர்

இந்த கனிமங்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக உலகில் எந்தப் பகுதியைக் காட்டிலும் லித்தியம் ஆப்கனிலேயே அதிகளவில் உள்ளது. இதை மையமாக வைத்தே ஆப்கனில் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. முதலில் சோவியத் யூனியன், அடுத்து போராளிக் குழுக்களுடன் யுத்தம், அடுத்த 20 ஆண்டுகள் அமெரிக்கா படைகள் என 40 ஆண்டுகளாகவே ஆப்கனில் குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இந்த நிலை இதன் பிறகும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பெண்களுக்கு எதிராக நடவடிக்கையைத் தொடங்கியுள்ள தாலிபான்கள், மற்ற விஷங்களில் பெரியளவில் முனைப்புக் காட்டியதாகத் தெரியவில்லை.

சீனா குறி

சீனா குறி

இதைச் சீனா பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது. உலகளவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியில் சீனா தான் முன்னணியில் உள்ளது. இது அனைவருக்கும் தெரியும், வரும் காலத்தில் இவை மேலும் அதிகரிக்கும் என்பதால் கனிம தேவையைப் பூர்த்தி செய்ய ஆப்கனுக்கு உதவச் சீனா முன் வந்துள்ளது. தற்போது ஆப்கன் பொருளாதாரம் மோசமாக உள்ளதால் வெளிநாடுகளின் உதவியின்றி, அந்நாட்டைத் தாலிபான்களால் ஆட்சி செய்ய முடியாது. எனவே, இந்த நிலையைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யச் சீனா முடிவெடுத்துள்ளதாகவும், அதற்குப் பதிலாக அந்த 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமங்களைக் குறி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச பிரச்சினைகள்

சர்வதேச பிரச்சினைகள்

ஆனால், திட்டமிட்டபடி சீனாவுக்கு இந்த கனிமங்கள் கிடைக்க வேண்டும் என்றால் பல விஷயங்கள் சீனா எதிர்பார்த்தப்படி நடக்க வேண்டும். என்ன தான் அமெரிக்கப் படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறி இருந்தாலும், உலக நாடுகள் மத்தியில் ஆப்கனை தனிமைப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிபர் பைடனுக்கு உள்ளது. தாலிபான்களுக்கு உதவும் வகையில் ஐநா சபையில் சீனாவும் ரஷ்யாவும் எதாவது தீர்மானத்தைக் கொண்டு வந்தால், அமெரிக்காவால் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்க முடியும். சமீபத்தில் ஜி7 கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூட, தாலிபான்களின் பேச்சை நம்ப முடியாது என்றும் அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. தாலிபான்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்கா, ஆப்கனுக்கு அளிக்க வேண்டிய 9.5 பில்லியின் டாலரையும் நிறுத்தி வைத்துள்ளது.

தாலிபான்கள் கருத்து

தாலிபான்கள் கருத்து

இப்படி வரிசையாகப் பல தடைகள் உள்ளதால், அதை நீக்கும் நடவடிக்கைகளைத் தாலிபான்கள் தொடங்கியுள்ளன. ஆப்கனில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகூட விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஆப்கன் ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ஆப்கனை மீண்டும் கட்டமைக்க உதவும் வகையில் தாலிபான்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதிகப்படியான தடை விதிக்கப்பட்டால், அது ஆப்கன் மக்களுக்கே அதிக சிரமத்தை அளிக்கும் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா நோக்கி நகரும் தாலிபான்கள்

சீனா நோக்கி நகரும் தாலிபான்கள்

ஆனால், இவை உடனடியாக சரியாக எந்தவொரு வாய்ப்பும் இல்லை. இதனால், தாலிபான்கள் சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆப்கானைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சீனாவுக்கும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். ஏற்கனவே, சீனாவுக்கு எதிரான போராளிக் குழுக்களுக்கு அடைக்கலம் தரமாட்டோம் என உறுதியளித்தால், தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயார் எனச் சீனா அறிவித்திருந்தது. மேலும், இந்தியாவுக்கும் இது மிகப் பெரிய செக்காக இருக்கும். இவை அனைத்தையும்விட அந்த 1 டிரில்லியன் மதிப்பிலான கனிமங்களே சீனாவின் முக்கிய குறியாக இருக்கும்.

சீனாவின் மாஸ்டர் பிளான்

சீனாவின் மாஸ்டர் பிளான்

சீனாவுக்குத் தேவைப்படும் நேரத்தில் இது நடந்துள்ளதால், இந்த வாய்ப்பை சீனா மிஸ் செய்யாது. பருவ நிலை மாற்றம் காரணமாக கார் தொடங்கி அனைத்தும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. மின்சார பேட்டரிகளை தயாரிக்க லித்தியம் என்ற தாது மிக மிக முக்கியம், இந்த லித்தியத்திற்கு தற்போது பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. வரும் காலத்தில் சீனாவின் வளர்ச்சி எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், லித்தியம் கையிருப்பை அதிகரிக்க வேண்டும். இதனால் ஒருபுறம் தாலிபான்களுக்கு உதவி, மறுபுறம் அந்த கனிமங்களைக் குறி வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது சீனா.

சிக்கல்கள்

சிக்கல்கள்

ஆனால், இதில் சீனாவுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. ஏற்கனவே கடந்த 2000களில் ஆப்கனில் இருந்து செம்புகளை வெட்டியெடுக்க 3 பில்லியின் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் சீனா மேற்கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட சீனாவால் செம்புகளை வெட்டியெடுக்கும் பணிகளைத் தொடங்க முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக ஆப்கனின் பல பகுதிகளில் முறையான ரயில் வசதி இல்லை. இதனால் வெட்டியெடுக்கும் செம்பை இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.

ஜாக்பாட் கிடைக்குமா

ஜாக்பாட் கிடைக்குமா

இன்னொரு பெரிய பிரச்சினையும் உள்ளது. அதாவது கொள்கை ரீதியாக இதுபோன்ற முடிவுகளை எடுப்பதில் தாலிபான்களின் வரலாறு சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. கடந்த காலங்களில் பல முறை சொன்னது ஒன்று செய்தது ஒன்று என்றே தாலிபான்கள் இருந்துள்ளனர். ஆனால், இந்த முறை நிலைமை அப்படி இருக்காது என்றும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்றி, ஆப்கனை கட்டமைக்கவுள்ளோம் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளன. இந்த முறை மட்டும் தாலிபான்கள் வாக்குறுதிகள் அளித்தபடி நடந்து கொண்டால், வெளிநாடுகளின் உதவியுடன் ஆப்கன் மக்களின் வாழ்வு மேம்படும். அதைவிட முக்கியமாகச் சீனாவுக்கு 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஜாக்பாட்டும் கிடைக்கும்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+