ஜெ. வழக்கில் எஸ்கேப் ஆகிறதா கர்நாடகா? காங். சட்ட பிரிவு தலைவர் பேட்டியின் ரகசியம்!
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்வதில் இருந்து பின்வாங்க கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னோட்டமாக, காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டப்பிரிவு தலைவரின் இன்றைய பேட்டி அமைந்துள்ளது.
ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்ய சுப்பிரமணியன் சுவாமி தேவையில்லாமல் கர்நாடகாவுக்கு நெருக்கடி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு தலைவர் சி.எம்.தனஞ்சய் பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிகாரம் இல்லையா?
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, வழக்கை கர்நாடகா நடத்தியது. மற்றபடி, வழக்கிற்கும் கர்நாடக அரசுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இந்த வழக்கில், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் திமுகவின் அன்பழகன் ஆகியோர்தான் பார்ட்டிகள். கர்நாடகா வழக்கில் ஒரு பார்ட்டியே கிடையாது. மேல்முறையீடு செய்ய கர்நாடகாவுக்கு அதிகாரம் இல்லை என்பதே எங்கள் கருத்து. இவ்வாறு தனஞ்சய் தெரிவித்தார்.

என்ன அவசியம்
ஜெயலலிதா அப்பீல் குறித்த கர்நாடக அரசின் முடிவில், தனஞ்சய் பேட்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், தனஞ்சய் சம்மந்தம் இல்லாமல் இந்த பேட்டியை கொடுக்க வேண்டிய தேவை என்ன வந்தது என்கின்றனர் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள். எப்படியும், இன்னும் 2 நாட்களில் கர்நாடக அமைச்சரவை, அப்பீல் குறித்து முடிவெடுக்க உள்ளது. ஆனால், முந்திக்கொண்டு தனஞ்சய் இன்று பேட்டியளிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. இங்குதான் சூட்சமம் உள்ளது.

எஸ்கேப்
ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்யாமல் தவிர்த்துவிடுவது என்று காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து கிரீன் சிக்னல் வந்துள்ளதாகவும், மேலும் தமிழகத்துடன் சில விவகாரங்களில் சமரசம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. எனவே, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாமல் தவிர்க்கவே முயலுவதாக ஏற்கனவே, தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆச்சாரியாவால் நெருக்கடி
இந்நிலையில், கர்நாடக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்ட பி.வி.ஆச்சாரியா பகிரங்கமாக பேட்டியளித்துவிட்டார். இதை கர்நாடக அரசில் உயர்மட்டத்திலுள்ள சிலர் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், மக்கள் மத்தியில், ஏன் கர்நாடக அரசு அப்பீல் செய்யவில்லை என்ற எண்ணம் ஏற்படுவதால், நாங்கள் பரிசீலனை செய்துவருகிறோம் என்று மட்டும் தொடர்ந்து அரசு தரப்பில் யாராவது பேட்டி கொடுத்தவண்ணம் இருந்தனர்.

காரணம் உருவாக்கப்பட்டுவிட்டது
இந்நிலையில், இன்று காங்கிரஸ் சட்டப்பிரிவின் தலைவர் தனஞ்சயா, இந்த வழக்கில் கர்நாடகாவுக்கு உரிமையில்லை என்று பேட்டியளித்து, மக்களை குழப்பிவிட்டார். எனவே, இந்த பாயிண்டை காரணமாக சொல்லி, அப்பீலுக்கு போகாததற்கு நியாயம் கற்பிக்க கர்நாடக அரசு முடிவு செய்துவிட்டதாக இம்மாநில மூத்த பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.

அமைச்சரே எதிர்ப்பு
கர்நாடக காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே சிலர் இந்த கருத்தை பகிரங்கமாக சொல்ல ஆரம்பித்துள்ளனர். கர்நாடக அரசின் மின்துறை அமைச்சராக இருப்பவர் டி.கே.சிவகுமார். ஆட்சியில் மிகுந்த அதிகாரம்மிக்கவர். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு கூடாது என்று தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவுக்கு கீழ்நீதிமன்றம் தண்டனை கொடுக்கும்போதே, இது மிக அதிகமான தண்டனை என்று சிவகுமார் கூறியிருந்தார். சிவகுமார் மீதும் குவாரி மோசடி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications