எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
ஜெய்ப்பூர்: ஓட்டு வங்கிக்காக எஸ்சி, எஸ்டிக்களின் இடஒதுக்கீட்டை குறைத்து அதில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமர் மோடி பரபரப்பாக பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி பிரதமர் மோடி இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சாவாய் மதோபூர் லோக்சபா தொகுதியில் வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சி எஸ்சி, எஸ்டி மக்களின் இடஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயற்சித்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது: 2014க்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் தங்களின் சிறப்பு ஓட்டு வங்கியாக இருப்போருக்கு தனியாக இடஒதுக்கீடு கொடுக்க விரும்பினர். இந்த இடஒதுக்கீட்டை தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் குறைத்து வழங்க முடிவு செய்தனர். ஆனால் அரசியலமைப்பு என்பது அவர்களுக்கு எதிரானதாக இருந்தது.
இடஒதுக்கீடு உரிமை என்பது அம்பேத்கரால் தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகளுக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மற்றும் ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க விரும்பியது.
காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எப்போதும் வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாக கொண்டதாகும். 2004ல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது அவர்கள் செய்த முதல் காரியங்களில் ஒன்று ஆந்திராவில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்தது தான். இது 2004 மற்றும் 2010ம் ஆண்டுக்கு இடையே காங்கிரஸ் அரசு செயல்படுத்த விரும்பிய முன்னோடி திட்டமாகும். அதன்படி 4 முறை முஸ்லிம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முயன்றனர்.
ஆனால் 2011ல் உச்சநீதிமன்றம் எச்சரித்த நிலையில் அவர்களால் இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியவில்லை. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களுக்கு உரிமை வழங்கும் இடஒதுக்கீட்டை மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கிக்காக அரசியலமைப்புக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுத்த துடித்தது. காங்கிரஸ் கட்சி எப்போதும் அரசியலமைப்பு சட்டத்தை பற்றி கவலைப்படுவதே இல்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications