ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்.. “உங்கள் ஆசீர்வாதங்களுடன்”.. முதல் ட்வீட்!
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஜார்க்கண்ட்டின் 11வது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
அவருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உங்கள் ஆசீர்வாதத்துடனும் நல்வாழ்த்துகளுடனும் இன்று ஜார்கண்ட் ஆளுநராகப் பதவியேற்றதில் பெருமையடைகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.

சி.பி.ராதாகிருஷ்ணன்
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து அண்மையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி உத்தரவிட்டார். தமிழ்நாட்டு பாஜக தலைவராக 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு முறை கோவை தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய கயிறு வாரியத் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார்.

ஜார்க்கண்ட் ஆளுநர்
ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அரசியல் சார்ந்தோ, அரசு அமைப்புகளிலோ பதவியில் இருக்கக் கூடாது என்பது விதி. ஜார்க்கண்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ஆம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று
ஜார்க்கண்ட் சென்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிர்சா முண்டா விமான நிலையத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், சபாநாயகர், மேயர் ஆஷா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பதவியேற்பு
சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அவரது உறவினர்களும் ராஞ்சிக்கு சென்றுள்ளனர். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ராஜ் பவனில் செய்யப்பட்டிருந்தன. புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பங்கேற்றனர்.

முதல்வர் வாழ்த்து
ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகப் பதவியேற்ற மரியாதைக்குரிய சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மாநிலத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் உங்களின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி
சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கும்போது காவி நிற மேற்சட்டை - வெள்ளை வேஷ்டி அணிந்திருந்தார். ஆளுநராகப் பதவியேற்ற பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், உங்கள் ஆசீர்வாதத்துடனும் நல்வாழ்த்துகளுடனும் இன்று ஜார்கண்ட் ஆளுநராகப் பதவியேற்றதில் பெருமையடைகிறேன் எனத் தெரிவித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications