"ஸ்வீட் 65" மூலம் மோடியின் "ஏகே 49"க்கு பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்!
பெங்களூரு: அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மோடி வைத்த ஒரு செல்லப் பெயர் ஏகே 49. காரணம், அவர் கடந்த முறை முதல்வராக இருந்தது 49 நாட்கள்தான். இதை வைத்து இப்படி ஒரு கிண்டல் பெயரை உருவாக்கினார் மோடி.
கடந்த லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கெஜ்ரிவாலைப் பற்றி பிரசாரம் செய்தபோதுதான் இப்படிக் கிண்டலடித்துப் பேசினார் மோடி.
ஆனால் இன்று நரேந்திர மோடி, அமீத் ஷா, கிரண் பேடி மற்றும் பாஜக ஆகியோருக்கு எதிரான போரில் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மியும் ரத்தம் சிந்தாமல், மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். மோடி பேச்சுக்கு ஸ்வீட் 65 மூலம் பழிவாங்கியுள்ளார் கெஜ்ரிவால்.

49 நாளில் முடிந்த கெஜ்ரிவாலின் முதல் ஆட்சி
2013ம் ஆண்டு டிசம்பர் டெல்லியில் ஆட்சியமைத்தார் கெஜ்ரிவால். ஆனால் 2014 பிப்ரவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவியில் இருந்தது 49 நாட்கள்தான்.

ஜன்லோக்பால் விவகாரம் தொடர்பாக
ஜன் லோக்பால் மசோதா, டெல்லி மின்சாரப் பிரச்சினை, காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் என பல முக்கியப் பிரச்சினைகளுக்காக கடுமையாகப் போராடிப் பார்த்தார் கெஜ்ரிவால். அதில் வெல்லமுடியாமல்தான் அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.

பதவி விலகிய அதே நாளில்
கடந்த முறை அவர் பிப்ரவரி 14ம் தேதிதான் பதவியிலிருந்து விலகினார். தற்போது அதே பிப்ரவரி 14ம் தேதியன்று அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை சுதாரிப்பாக இருப்பார்
ஆனால் இந்த முறை அவர் சுதாரிப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம். 50 நாட்களைக் கடப்பதோடு முழுமையாக ஐந்து ஆண்டு காலம் பதவியில் அமர்ந்து, டெல்லியில் நல்லாட்சி நடத்தி விட்டால் அது நாடு முழுமைக்கும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று நம்பலாம்.

ஒத்துழைப்பாரா மோடி
கடந்த முறை கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தபோது மத்தியில் காங்கிரஸ் தலைமையில் குழப்பமான ஒரு கூட்டாட்சி இருந்தது. புதுமையை விரும்பாதவர்கள் பலர் அதில் குடியிருந்தனர். ஊழலுக்கு எதிரான குரலை விரும்பாதவர்கள் பலர் அதில் இருந்தனர். ஆனால் இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. நேர்மையானவர், ஊழலுக்கு எதிரானவர் என்ற இமேஜுடன் கூடிய மோடி பிரதமராக இருக்கிறார். எனவே அவர் கெஜ்ரிவாலுக்கு எப்படி உதவப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகியுள்ளது.

சவால்தான்
நிச்சயம் இந்த முறையும் கெஜ்ரிவாலுக்கு நிறைய சவால்கள் காத்துள்ளன. அதிலிருந்து அவர் மீண்டு வருவதற்கு பல போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். ஆனால் மக்கள் ஒத்துழைப்புடன், கடந்த முறை சந்தித்த அனுபவங்களை வைத்து இந்த முறை அவர் அதை எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
