ஒருபக்கம் வளர்ச்சி.. இன்னொரு பக்கம் சத்துணவு கிடைக்காமல் சவமாகும் குழந்தைகள்..!
டெல்லி: ஒருபக்கம் இந்தியா பல்துறைகளில் வளர்ச்சி கண்டு வரும் போதிலும் கூட போதிய உணவு ஊட்டச் சத்து கிடைக்காமல், பல ஆயிரம் குழந்தைகள் பட்டினியிலும், சத்துக் குறைபாட்டாலும் மடிந்து வரும் அவலமும் தொடர்கிறது.
கடந்த 24 ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது 55 சதவீதமாக குறைந்து விட்ட போதிலும் கூட பசி, பட்டினி, ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக உயிரிழக்கும் குழந்தைகள்தான் ஏராளமாக உள்ளனர் என்று ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறது.
இதுகுறித்து "Indiaspend" இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையிலிருந்து...

இந்தியாவில் அதிகம்
உலக நாடுகளிலேயே அதிக அளவில் ஊட்டச் சத்துக் குறைபாட்டுக்குப் பலியாகும் குழந்தைகள் இந்தியாவில் அதிகம் உள்ளனர் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி.
20102ம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1000 இறந்த குழந்தைகளில் 56 குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இறந்தவர்கள் ஆவர்.

வைட்டமின் இல்லை, தாது சத்துக்கள் இல்லை
போதிய அளவு வைட்டமின்கள், தாதுச் சத்துக்கள் உள்ளிட்ட பிற சத்து உடம்புக்குப் போய்ச் சேராமல் இறந்தவர்கள் இந்தக் குழந்தைகள்.
இப்படிப்பட்ட இறப்புகளைத் தடுக்க போதிய உணவு கிடைப்பது மட்டும் தீர்வாக அமையாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மாறாக, தூய்மையான ஆரோக்கியமான குடிநீர், துப்புறவான சுற்றுப்புறகள், பெண் கல்வியறிவு ஆகியவையும் கூட குழந்தை இறப்புகளைத் தடுக்க அவசியம் தேவை என்பது ஹூ தரும் கருத்தாகும்.

இறப்பு விகிதம் குறகிறது
மறுபக்கம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதமானது குறைந்து கொண்டு வருகிறது என்பது ஆறுதல் செய்தியாகும். 2010ம் ஆண்டு 61 குழந்தைகள் இறந்தன. அது 2012ம் ஆண்டு 56 ஆக குறைந்திருந்தது. இது 8 சதவீத குறைவாகும். அதேசமயம் இந்த எண்ணிக்கையானது 1990ம் ஆண்டு 126 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியமற்ற குடிநீர்
பெரும்பாலும் பல்வேறு நோய்களுக்கு ஆரோக்கியமற்ற குடிநீரே காரணமாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைக்காத நிலையே இன்னும் காணப்படுகிறது. தரமற்ற, பல்வேறு நோய்களைப் பரப்பக் கூடிய குடிநீர்தான் இன்னும் பல கிராமங்களில் மக்களுக்குக் கிடைக்கிறது. இதனால் பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் நோய்கள் அளவு அதிகமாகவே உள்ளது.

மல ஜலம் கழிப்பு குறைந்தாலும்
மேலும் குடிநீர்ப் பற்றாக்குறையால் கிடைக்கும் நீரைக் குடிக்கும் அவலமும் காணப்படுகிறது. மேலும் வெளியிடங்களில் மல ஜலம் கழிப்பது இன்னும் தொடர்கிறது. போதிய கழிப்பறை வசதி இன்னும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கை கூடவில்லை. பொது இடங்களில் மலம் கழிப்பது முற்றிலும் குறையவில்லை. இதனாலும் பல நோய்கள் பரவுகின்றன.
உலக அளவில் 10.5 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் உயிரிழக்கிறார்கள். இதில் 88 சதவீதம் பேர் வயிற்றுப் போக்கு காரணமாக இறப்பவர்கள் ஆவர்.

சுத்தமில்லாத குடிநீர்
சுத்தமில்லாத தண்ணீர் காரணமாகவே வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை பரவுகிறது. கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதது உள்ளிட்ட பல சுத்தப் பிரச்சினைகளும் கூட வியாதிகள் பரவ முக்கியக் காரணமாகும்.
இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட குழாய் குடிநீர் உள்ள வீடுகளின் எண்ணிக்கை கடந்த 2000மாவது ஆண்டு முதல் அதிகரித்து வருகிறது. அதேபோல வீட்டுச் சுகாதாரமும் மேம்பட்டு வருகிறது. அதேபோல பொது இடங்களில் மலம் கழிக்கும் செயல் கடந்த 2000மாவது ஆண்டு 63 சதவீதமாக இருந்தது. இது 2012ம் ஆண்டில் 48 சதவீதமாக குறைந்து விட்டது. ஆன போதும் இது இன்னும் தொடர்வது பிரச்சினை இன்னும் நீடிப்பதையே சுட்டிக் காட்டுகிறது.

பெண் கல்வியறிவு
பெண் கல்வியறிவு என்பது பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். இதன் மூலம் குழந்தை வளர்ப்பு குறித்த புரிதல் ஏற்பட்டு குழந்தைகளை தாய்மார்கள் சரியான முறையில் பராமரிக்க அது உதவும். இதனால் குழந்தை இறப்பு விகிதத்தையும் வெகுவாக குறைக்க முடியும் என்பது ஹூ கருத்தாகும்.

அனைவருக்கும் கல்வித் திட்டம்
கடந்த 2000மாவது ஆண்டு மத்திய அரசு ஆரம்பித்த அனைவருக்கும் கல்வித் திட்டமானது மிகச் சிறந்த முறையில் மக்களைச் சென்றடைந்துள்ளது. இதன் மூலம் அதிக அளவிலான பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பில் இணைந்துள்ளனர். கசடந்த 2000மாவது ஆண்டு நடுநிலைப் பள்ளிகளில் இருந்த சிறுமிகளின் எண்ணிக்கை 38 சதவீதமாக இருந்தது. இது 2011ம் ஆண்டு 66 சதவீதமாக நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது.

பிரிக்ஸ் நாடுகளில் நம்பர் ஒன்
பிரிக்ஸ் நாடுகளிலேயே இந்தியாவில்தான் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதாவது 56 சதவீதமாக உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இது 45 சதவீதமாக உள்ளது. பாகிஸ்தானில் 1000 குழந்தைகளில் 86 குழந்தைகள் பிறந்து இறக்கின்றன. வங்கதேசம் கூட முன்னேறியுள்ளது. அங்கு 41 ஆக குழந்தை இறப்பு குறைந்துள்ளது.

வழி காட்டும் மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவிடமிருந்து ஒட்டுமொத்த தேசமும் நிறைய கற்றுக் கொள்ளளாம். அங்கு ஊட்டச் சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் இறப்பது வெகுவாக குறைந்துள்ளது. 2006 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் அந்த அளவானது 12 சதவீதமாக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications