For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக எம்.பி கதிர் ஆனந்தை உளவுத்துறை விசாரித்ததா? கிளம்பிய புதிய பிரச்சனை - என்ன நடந்தது?

By BBC News தமிழ்
|

டெல்லியில் உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்ட இருவர் தன்னிடம் விசாரிப்பது போல கேள்வி எழுப்பியதாக வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் பதிவு செய்த நிகழ்வு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கியதும் வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசினார்.

Kathir Ananth

அப்போது அவர், "இன்று பிற்பகல் நான் தங்கியிருந்த அறையில் என்னை இரண்டு பேர் சந்தித்தனர். மக்களவையில் உங்களுடைய கட்சியின் செயல்பாடு என்ன, என்ன பிரச்சனைகளை பேசப் போகிறீர்கள்? தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளில் உங்களுடைய கட்சியின் நிலைப்பாடு என்ன என்றெல்லாம் கேட்டார்கள். இன்றைய அலுவலின்போது என்ன பேசப்போகிறீர்கள் அவர்கள் கேட்டனர்," என்றார்.

நீங்கள் யார் என அவர்களிடம் கேட்டபோது, "நாங்கள் உளவுப்பிரிவினர்" என்று இருவரும் தெரிவித்தனர்.

இதையடுத்து கதிர் ஆனந்த், என்னிடம் தொடர்ச்சியாக அந்த இருவரும் விசாரிப்பது போல கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்று கேள்வி எழுப்பினார்.

அவர் இந்த விவகாரத்தை எழுப்பியதும், "உறுப்பினருக்கு பாதுகாப்பு இல்லை" என்று திமுக உள்ளிட்ட மற்ற கட்சி உறுப்பினர்கள் அழைக்குள் குரல் எழுப்பினர்.

இதையடுத்து சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா, நாடாளுமன்றத்தில் எதை பேசுகிறீர்களோ அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். எதை சொல்வதாக இருந்தாலும், எழுத்துப்பூர்வமாக தெரிவியுங்கள் என்று கூறினார்.

இது அவமானகரமான விஷயம் என நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு சுட்டிக்காட்டியபோது, "நீங்கள் மூத்த உறுப்பினர். எழுத்துப்பூர்வமாக கொடுங்கள். அனைவரது வார்த்தைகளையும் கவனிக்க தயாராக இருக்கிறேன். அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது சபாநாயகர் ஆன எனது கடமை" என்று ஓம் பிரகாஷ் பிர்லா கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கூறும்போது,"இது நிச்சயமாக தவறான அணுகுமுறை. முதலில் வந்தது உளவுத்துறையினர்தானா என்பதை விசாரிக்க வேண்டும். அதில் அவர்கள் உளவுத்துறையினர்தான் என தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றாலும், இது உரிமை மீறல் பிரச்னைக்குரிய விஷயம்தான். இந்த விவகாரத்தை மக்களவைக்கு உள்ளே எழுப்பியதில் எந்த தவறும் கிடையாது" என்று திருச்சி சிவா தெரிவித்தார்.

எம்.பியை உளவுத்துறை விசாரிக்கலாமா?

பொதுவாக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் உரிய அனுமதி பெறாமல் காவல்துறையினரோ, உளவுத்துறையினரோ அவர் தங்கும் இடத்தில் சென்று விசாரிக்க அதிகாரம் இல்லை. அதே சமயம், அதற்கான வாய்ப்புகள் வேறு வகையில் இருப்பதை ஒதுக்கி விட முடியாது என்று காவல்துறை உயரதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மிகப்பெரிய அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அவை தொடர்பான தகவல்களை திரட்டவும் மாநில, மாவட்ட அளவில் காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவினர் இருக்கிறார்கள். அதே நடைமுறை டெல்லியிலும் உள்ளது.

மேலும், இந்திய உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் ப்யூரோவும் (ஐபி) அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக மிகப்பெரிய அதிகாரிகள், களப்பணியாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இதில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் காலத்தில் இதற்கென காவலர்களும், ஐ.பி. அலுவலர்களும் பிரத்யேக கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்படுகிறார்கள்.

கொரோனா பரவல் காலத்துக்கு முன்புவரை, பல்வேறு மாநிலங்களில் உள்ள உளவுப்பிரிவினர் அல்லது தீவிரவாத தடுப்புத்துறையினர், நாடாளுமன்ற சிறப்புப் பணி என்ற பெயரில் டெல்லியில் 15 முதல் 20 நாட்கள் என்ற அளவில் சுழற்சி முறையில் டெல்லிக்கு ஒவ்வொரு மாநில காவல்துறையாலும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குலுக்குப்பிறகு இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கை பின்பற்றப்படுகிறது. ஆனால், அவர்களின் வேலை, எம்.பி.க்களை கண்காணிப்பது கிடையாது. நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வருவோர், நாடாளுமன்றத்துக்கு வெளியே இருப்பவர்களின் செயல்பாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருவோரில் மத்திய, மாநில காவல்துறையால் தேடப்படும் அல்லது பிரபலமான நபர்கள் வருகிறார்களா, என்ன பின்னணியில் வருகிறார்கள் என்பதை கண்காணிப்பதே அவர்களுடைய பணியாக இருக்கும்.

இந்த வரிசையில், தமிழ்நாடு காவல்துறையின் க்யூ பிரிவு அதிகாரிகள் நாடாளுமன்ற பணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். இதேபோல, மாநிலத்தில் உள்ள இந்திய உளவுத்துறையின் இரு அலுவலர்கள் அடங்கிய குழுவினரும் நாடாளுமன்ற பணிக்கு வருவார்கள். இதில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் இம்முறை எந்தவொரு காவலரோ அதிகாரியோ டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று அதன் காவல்துறை உயரதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், "எம்.பி கதிர் ஆனந்தை சந்தித்தது மாநில காவல்துறையா அல்லது மத்திய உளவுத்துறையா என்பது தெளிவாகவில்லை. அவர்கள் அலுவல்பூர்வமாக கதிர் ஆனந்தை சந்தித்தார்களா அல்லது தனிப்பட்ட முறையில் சந்தித்தார்களா என்பதும் தெரியவில்லை.

மேலும், கதிர் ஆனந்த் தெரிவிக்கும் நபர்களுடனான சந்திப்பு அவர் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் நடந்துள்ளதால், இந்த விவகாரம் மீது மக்களவை செயலகம் தெரிவிக்கும் புகார் அடிப்படையில் இதை டெல்லி காவல்துறையே விசாரித்து யார் அவரிடம் பேசினார்கள் என்ற உண்மையை கண்டறிய முடியும். அதுவரை காத்திருக்க வேண்டும்" என்று மத்திய உள்துறை அமைச்சக உள்நாட்டுப்பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரி தெரிவித்தார்.

Click here to see the BBC interactive

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
The incident, which was recorded by DMK member Kathir Anand from Vellore constituency, has caused a stir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X