"அநியாயம் பண்றாங்க".. பொங்கும் குஜராத் காங்கிரஸ் "தலை".. தேர்தலுக்கு முன்பே கதரில் விழுந்த ஓட்டை
காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் தொகுதி ஒதுக்கீடு பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.
பணம் பெற்றுக்கொண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக குஜராத்தின் மெஹ்சானா தொகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அந்த தொகுதியில் கட்சியின் தலைவராக உள்ள பாவேஷ் படேல், கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மெஹ்சானா தொகுதி
ஏற்கெனவே ஜலால்பூர்-காதியா தொகுதியில் இது தொடர்பாக பிரச்னை எழுந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள், தலைமைக்கு எதிராக போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில் தற்போது மெஹ்சானா தொகுதியிலும் பிரச்னை வெடித்துள்ளது. இந்த தொகுதியில் பாவேஷ் படேல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு 'சீட்' ஒதுக்கப்படவில்லை. இதற்கு எதிராக கொதித்தெழுந்துள்ள அவர், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு
இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், "தொகுதி ஒதுக்கீடு நேர்மையான முறையில் நடைபெறும் என்று கூறினார்கள். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. மாறாக பணம் பெற்றுக்கொண்டு தொகுதி ஒதுக்கப்பட்டதாக மக்களே குற்றம்சாட்டியுள்ளனர். எனவே எனது ஆதரவாளர்கள் விரும்பினால் நான் சுயேட்சையாக போட்டியிட தயங்க மாட்டேன்" என்று கூறியுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக இது போன்று தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பலவீனம்
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக ஆம் ஆத்மி தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், காங்கிரஸின் சிறுபான்மையினர் வாங்கு வங்கியில் பலத்த அடி விழும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் கட்சிக்குள்ளேயே இவ்வாறு சர்ச்சை ஏற்படுவது கட்சியின் பலவீனத்தை மேலும் அதிகரிக்க செய்யும் என அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இவ்வாறான சர்ச்சைகள் காங்கிரஸில் மட்டுமல்லாது பாஜகவிலும் தொடர்ந்து வருகிறது. அதாவது, விஜாப்பூர் தொகுதியில் ராமன்பாய் படேலுக்கு பாஜக 'சீட்' கொடுத்தது.

பாஜவிலும் சலசலப்பு
ஆனால் அங்கு ஏற்கெனவே, பிஐ படேல் மற்றும் சுரேஷ் படேல் என இரு தலைவர்கள் இருக்கின்றனர். இவர்களை தவிர்த்து மூன்றாவதாக உள்ள ராமன்பாய் படேலுக்கு சீட் கொடுத்திருப்பது இவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இவர்கள் கட்சி தலைமை மீது குற்றம் சுமத்தி சர்ச்சையை ஏற்படுத்தினர். தற்போது வரை பாஜக 181 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதேபோல ஆம் ஆத்மியும் 181 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மீதமிருப்பது காங்கிரஸ் மட்டுமே. வரும் 1ம் தேதி தொடங்கும் தேர்தல் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதேபோல 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications