"இதுலாம் தேவையில்லாத கேள்வி".. மாசு குடிநீரை குடித்து 8 பேர் பலியான விஷயத்தில் பாஜக அமைச்சர் டென்ஷன்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாசுபட்ட குடிநீரை குடித்து பலர் பலியாகி உள்ளனர். இதுபற்றி கேள்வி கேட்டதற்கு பாஜக எம்எல்ஏ கைலாஷ் விஜய்வர்கியா, ‛‛அதை விடுங்கள். தேவையில்லாத கேள்விகளை கேட்காதீர்கள்'' எனக்கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மோகன் யாதவ் உள்ளார். இவரது அமைச்சரவையில் கைலாஷ் விஜய்வர்கியா என்பவர் அமைச்சராக உள்ளார். இவர் நகர மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் மத்திய பிரதேச சட்டசபை விவகாரத்துறை உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருகிறார்.
கைலாஷ் விஜய்வர்கியா இந்தூர் - 1 சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கேபினட் அமைச்சராக உள்ளார். இந்தூரை எடுத்து கொண்டால் அது நம் நாட்டின் தூய்மையான நகர் என்று பலமுறை பெயர் பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் இந்தூரில் உள்ள பகீரத்புராவில் மாசடைந்த குடிநீரை குடித்த மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 162 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் அமைச்சர் விஜய் வர்கியா மாசுபட்ட குடிநீரை குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛குடிநீர் மாசுபாடு தொடர்பாக இளநிலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர், மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?'' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு விஜய் வர்கியா, ‛‛அதை விட்டு தள்ளுங்கள். தேவையில்லாத கேள்விகளை கேட்காதீர்கள்'' எனக்கூறி டென்ஷனானார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது. நெட்டிசன்கள் பலரும் அமைச்சர் விஜய் வர்கியாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வருத்தம் தெரிவித்தார். இதுபற்றி அவர், ‛‛எனது குழுவினரும், நானும் கடந்த 2 நாட்களாக தூக்கமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை சரிசெய்ய உழைத்து வருகிறோம். . மாசடைந்த தண்ணீரால்எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டனர்.
இந்த ஆழ்ந்த துயர நிலையில் ஊடகத்தின் கேள்விக்கு நான் அளித்த பதில் தவறாக வந்துவிட்டது. இதற்கு நான் வருந்துகிறேன். எனது மக்கள் முழு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications