ரயில் சேவை திடீர் ரத்து.. வடகிழக்கு எல்லை ரயில்வே அதிரடி அறிவிப்பு.. வன்முறை தீயில் சிக்கிய மணிப்பூர்

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கிடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மணிப்பூருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் முக்கியமான மாநிலம் மணிப்பூர். அடர்த்தியான காடுகள் நிறைந்த இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்களும், சமவெளி பகுதிகளில் மைத்தேயி சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக மணிப்பூருக்கு குறிப்பிட்ட அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் மைத்தேயி மக்கள் தங்களையும் பழங்குடியின சமூகத்தினராக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Due to the increase in violence in Manipur, the train service has been canceled until normalcy returns

மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இவர்கள் 53 சதவிகிதம் இருக்கின்றன. மட்டுமல்லாது சட்டமன்றங்களிலும் இவர்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இவர்கள் நீண்ட நாட்களாக தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். பாஜகவும் தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தது. அதுபோல கட்சியும் ஆட்சிக்கு வந்தது.

இப்படி இருக்கையில் நீதிமன்றம் இவர்களது கோரிக்கையை மாநில பாஜக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 19ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு பழங்குடியினர் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காலங்காலமாக இந்த மலையோடு வாழ்ந்து வரும் எங்களுக்கு கொடுக்கும் அத்துனை சலுகைகளையும் பழங்குடியினர் அல்லாதோருக்கு கொடுப்பது ஏற்புடையது அல்ல என்று கூறி மைத்தேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தங்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறி, அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) சார்பில் புதன்கிழமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சுராசந்த்பூர், சண்டேல் மற்றும் தெங்னௌபல் என 7 மாவட்டங்களில் இந்த பேரணி நடைபெற்றது. ஆனால் இதற்கு போட்டியாக பழங்குடியினர் அல்லாதவர்களும் பேரணி நடத்தினர். இப்படியாக நடத்தப்பட்ட போட்டி பேரணியானது சுராசந்த்பூர் மாவட்டத்தில் சந்தித்துக்கொண்டபோது கலவரமாக வெடித்தது. கத்தி, அரிவாள் ஆகியவற்றைகொண்டு இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கிக்கொண்டனர். இதில் ஏராளமான வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அதேபோல இரு தரப்பிலும் குறிப்பிட்ட அளவில் சிலர் உயிரிழந்தனர். நிலைமை கையை மீறி செல்வதை பார்த்த மாநில அரசு உடனடியாக ராணுவத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதனையடுத்து ராணுவம், அசாம் ரைபிள் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் துணை ராணுப்படையினர் மற்றும் அதிரடிப்படையினரும் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். 16 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுவரை சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல மீண்டும் கலவரம் ஏதேனும் உருவானால் அதற்கு காரணமாக இருப்பவர்களை கண்டதும் சுட பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் கலவரம் நடந்த பகுதியில் ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்திற்கு எந்த ரயிலும் இயக்கப்படாது என்று வடகிழக்கு எல்லை ரயில்வே கூறியுள்ளது. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்திருக்கிறது. இது குறித்து வடகிழக்கு எல்லை ரயில்வேயின் சிபிஆர்ஓ சப்யாசாச்சி கூறுகையில், "நிலைமை சீரடையும் வரை மாநிலத்திற்குள் எந்த ரயிலையும் இயக்கக்கூடாது என்று மாநில அரசு கேட்டுக்கொண்டது. எனவே இந்த கோரிக்கையின் அடிப்படையில் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். இந்த கலவரம் குறித்து பாஜக அரசு மீது காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+