For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாடு முழுவதும் விஜயபாஸ்கர், கூட்டுறவு வங்கி இளங்கோவன் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை

By BBC News தமிழ்
|

தமிழ்நாடு கூட்டுறவு சங்க மாநில தலைவர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனைகளை நடத்திவருகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு சங்க மாநில தலைவராக இருப்பவர் சேலம் ஆர். இளங்கோவன். அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளராகவும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் அவர் இருந்து வருகிறார். அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் இவர்.

{image-_121120564 tamil.oneindia.com}

சேலம் ஆத்தூருக்கு அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் வீடு உள்பட அவர் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகள் சேலம், சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடந்து வருகிறது.

இளங்கோவனும் அவரது மகன் பிரவீன் குமாரும் வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் 3.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர். இளங்கோவன் 2014 முதல் 2020வரை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் பெயரிலும் தன்னுடைய மகன் பெயரிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுவாக்கில் 30 லட்ச ரூபாயாக இருந்த இளங்கோவனின் சொத்து மதிப்பு தற்போது 5.6 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது.

அவருடைய மாத வருமானத்தின்படி, தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ. 2.88 கோடியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், சுமார் 3.78 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அவர் தனது வருமானத்திற்குப் பொருந்தாதவகையில், 131 சதவீதம் அதிக சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கூடுதலாக சம்பாதித்த பணத்தை கல்வி நிலையங்களில் முதலீடு செய்ததோடு, வேறு சிலர் பெயர்களில் சொத்துகளாக வாங்கியிருப்பதும் தெரிய வந்ததை அடுத்து இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன.

சேலத்தில் 17 இடங்கள், திருச்சியில் நான்கு இடங்கள், நாமக்கல் மற்றும் சென்னையில் தலா இரண்டு இடங்களிலும் கரூரில் ஒரு இடத்திலும் இந்த சோதனைகள் நடக்கின்றன. இளங்கோவனின் மகன் பிரவீண் துணைத் தலைவராக உள்ள கல்வி நிறுவனத்திலும் சோதனை நடந்து வருகிறது.

விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில்

இது தவிர, தமிழ்நாடு சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும் சோதனைகள் நடந்து வருகின்றன. அவரது உதவியாளர் சரவணன், முருகன் ஆகியோரது வீடுகள், நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் ஏற்கனவே கடந்த 18ஆம் தேதி சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த சோதனைகளின்போது ஒத்துழைப்பு இல்லாதது, அலுவலகம், வீடு பூட்டப்பட்டிருந்தது ஆகிய காரணங்களால் அந்த இடங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறை சீல் வைத்தது. இதையடுத்து, இந்த இடங்களில் சோதனைகளை நடத்த நீதிமன்ற உத்தரவை பெறப்பட்டது. இதனால், இப்போது பூட்டை உடைத்து சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

சி. விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறை கடந்த 17ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்தது.

மேலும், புளியந்தோப்பு கே.பி. பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைக் கட்டிய பிரபல கட்டுமான நிறுவனமான பிஎஸ்டி எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் தென்னரசு வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இளங்கோவன் நடத்திவரும் அறக்கட்டளையில் தென்னரசுவும் உறுப்பினர் என்ற வகையில் இந்த சோதனை நடத்தபட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்காக பல்வேறு கட்டுமானப் பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டுவருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
DVAC Raids at ex-minister Vijayabaskar, Co op bank chief ilangovan aids house today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X