திடீரென குலுங்கிய பூமி.. குஜராத்தில் இரவில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2 என பதிவு.. அலறி ஓடிய மக்கள்
காந்தி நகர்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று இரவில் ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2 முதல் 3 வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று இரவு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.வடக்கு குஜராத் மாவட்டங்களான பனாஸ்கந்தா, பதான், சபர்கந்தா, மேசானா உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அதாவது இரவு 10.15 மணியளவில் திடீரென்று பூமி அதிர்ந்துள்ளது. இதனால் வீடுகள் லேசாக குலுக்கி உள்ளன. வீட்டில் உள்ள பொருட்கள் உருண்டு விழுந்துள்ளன. 2 முதல் 3 நிமிடங்கள் வரை நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களின் வீடுகளை விட்டு உடனடியாக வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். குஜராத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை காந்திநகரில் உள்ள நிலஅதிர்வு தொடர்பான ஆய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம், ‛‛குஜராத்தில் 4.2 என்ற ரிக்டர் அளவில் இரவு 10.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பதான் பகுதியில் இருந்து தெற்கு மற்றுமு் தென்மேற்கு பகுதியில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது'' என தெரிவித்துள்ளது.
இருப்பினும் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குஜராத்தில் எந்த உயிரிழப்பும், பெரிய சேதமும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் திடீர் நிலநடுக்கத்தால் பனாஸ்கந்தா, பதான், சபர்கந்தா, மோசானா உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்திலேயே இருந்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
குஜராத்தை பொறுத்தவரை அந்த மாநிலம் அவ்வப்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் 9 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2001 ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியான குடியரசு தினவிழாவின்போது குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். மேலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் மொத்த நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications