For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யானை-மனித எதிர்கொள்ளல்: பாதுகாப்பில் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருவது ஏன்?

By BBC News தமிழ்
|

யானை ஒரு நாளைக்கு சராசரியாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை நடக்கும். தினமும் 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். ஒரு இடத்தில் சாப்பிட்ட உணவின் மூலம், சாணத்தில் இருக்கும் விதைகளுக்கு உயிர்கொடுத்து புது செடிகளையும், மரங்களையும் மற்றொரு இடத்தில் வளர்க்கும் என்று சொல்லப்படுகிறது.

Elephant-human clash : Why is it emerging as a major conservation issue?

யானைகளைக் குழந்தையைப் போல அன்பானது மற்றும் குறும்புத்தனம் கொண்டது என்று சொல்வதுண்டு. இன்று உலக யானைகள் தினம். 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கமே யானைகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். இந்நிலையில், இன்றைய சூழலில் யானை-மனித எதிர்கொள்ளல் என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.

அதுகுறித்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் பிபிசி தமிழிடம் பேசும்போது, "இன்றைய சூழலில் யானை-மனித எதிர்கொள்ளல் அதிகளவில் உள்ளன. காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு போன்ற பணப் பயிர்களை அதிகளவில் பயிரிடுகின்றனர். இந்தப் பயிர்கள் யானைகளுக்கு மிகப் பிடித்தமானது என்பதால் காட்டை ஒட்டியுள்ள விவசாய நிலங்களைத் தேடி வெளியே வருகின்றன.

யானைகளுக்குப் பிடிக்காத பணப் பயிர்களும் இருக்கின்றன. அவற்றைப் பயிரிடுவதால், யானை-மனித எதிர்கொள்ளலைத் தவிர்க்க முடியும். பயிர்களுக்குச் சேதம் ஏற்படாது.

காட்டுயிர்களை நாம் குறை சொல்ல முடியாது. நாம் தான் அதற்கு ஏற்றாற்போல் பயிரிட வேண்டும். இதனால் யானை-மனித எதிர்கொள்ளலைத் தவிர்க்கலாம். இதை மக்களிடம் எடுத்துரைத்து யானைகளைப் பாதுக்காக்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும்.

யானைகளின் வலசைப்பாதையைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். முதுமலை புலிகள் காப்பகத்தில் சிகூர் காட்டுப் பகுதியில், அரசு யானைகளின் வலசைப் பாதையிலிருந்த ஆக்கிரமிப்புகள் 2010ஆம் ஆண்டு முதல் அகற்றப்பட்டு வருகிறது" என்றார்.

அதோடு, இந்த வலசைப் பாதை கேரளா, கர்நாடகா வழியாக முதுமலை வந்து சத்தியமங்கலம் வழியாக கிழக்குத் தொடர்ச்சி மலைக்குச் செல்லும் முக்கியமான பாதையாகும். இந்தப் பாதையை மீட்டெடுப்பதில் அரசும் வனத்துறையும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார் வெங்கடேஷ்.

மேற்கொண்டு பேசியவர், "வனத்தை விட்டு வெளியே வரும் யானைகள் மின்சார வேலிகளின் மூலம் விஷம் வைத்தும் கொல்லப்படுகின்றன. இது மிகவும் தவறு. யானை பாதுகாக்கப்படும் உயிரினங்கள் பட்டியலில் (schedule 1) இருக்கிறது.

காட்டை விட்டு வெளியே வரும் யானைகள் குறித்து உடனே வனத்துறைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து, அவை வராமல் தடுக்க வேறு எந்தவொரு நடவடிக்கையும் பொதுமக்கள் எடுக்கக்கூடாது. அவ்வாறு எடுத்தால் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றமாகும்," என்று கூறினார்.

10 ஆண்டுகளில் 1160 யானைகள் உயிரிழப்பு

இந்தியா முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 1160 என, ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை, தற்போது இருக்கும் யானைகளின் எண்ணிக்கை மற்றும் யானைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று பல்வேறு கேள்விகளுக்குப் பதில் கேட்டிருந்தார். அதற்கு யானைகள் திட்ட வல்லுநரும் தலைமை பொது தகவல் அலுவலருமான முத்தமிழ்ச் செல்வன் பதிலளித்துள்ளார்.

ரயில் மோதல்

கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன. அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 62 யானைகள் இறந்துள்ளன.

மின்சாரம் தாக்கி இறத்தல்

கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 741 யானைகள் இறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 133 யானைகள் இறந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 93 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.

வேட்டைக்குப் பலி

கடந்த 10 ஆண்டுகளில் வேட்டையாடப்பட்டு இறந்த யானைகளின் எண்ணிக்கை 169. இதில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 49 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 யானைகள் சட்டவிரோத காட்டுயிர் வேட்டைக்குப் பலியாகியுள்ளன.

யானைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான செலவு

இந்தியா முழுவதும் யானைகளைப் பாதுகாப்பதற்கான திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 212.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஆர்டிஐ ஆர்வலர் பாண்டியராஜாவிடம் பேசியபோது, "சமீப காலங்களில் யானைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. யானைகள் அழிந்தால் காடுகள் அழியும். வருங்கால சந்ததியினருக்காக யானைகளையும் காடுகளையும் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக துரிதமாகச் செயல்பட்டு இந்த யானைகள் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும்," என்றார்.

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 12 ஆண்டுகளாக, காட்டுயிர் உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் பி.ராமகிருஷ்ணன், 23 ஆண்டுகளாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். யானைகளின் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

யானைகளின் உயிர்ச்சூழல் அதிகமாக இருக்கும் நீலகிரி பகுதியிலுள்ள யானை-மனித எதிர்கொள்ளல் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார்.

அவரிடம் பேசியபோது, "2010ஆம் ஆண்டில் மத்திய அரசு, யானையை 'பாரம்பர்ய உயிரினமாக' அறிவித்த பிறகு தான் யானைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

யானைகள் பாதுகாப்புத் திட்டம் 1991ஆம் ஆண்டில் வருவதற்கு முன்பு, யானைகள் தந்தத்திற்காக அதிகளவில் வேட்டையாடப்பட்டன. தென்னிந்திய காடுகளில், வீரப்பனால் நிறைய யானைகள் கொல்லப்பட்டன.

1991ஆம் ஆண்டுக்குப் பிறகு யானையைப் பாதுகாக்க, வேட்டைத் தடுப்பு முகாம்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டதால் யானைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கையால், தந்தங்களை வணிகம் செய்ய முடியாத அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை இயற்றியுள்ளன.

தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டதால், ஆண் யானைகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது.

இருப்பினும், யானைகளின் வலசைப்பாதை மறிக்கப்படுவது, அவற்றின் வாழ்விடம் பாதிக்கப்படுவது, யானை-மனித எதிர்கொள்ளல் அதிகளவிலான இழப்புகளை ஏற்படுத்துவது என்று, இன்னமும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன," என்றார்.

அதிலும், குறிப்பாக ஆண் யானைகளைப் பாதுகாப்பதற்காகத் தான் யானைகள் பாதுகாப்புத் திட்டம் வந்தது. இதற்குச் சவாலான விஷயமே, மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதுதான். ஆனால், ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்குத் தகுதியான 25 முதல் 35 வயது வரையுள்ள யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால், காட்டு யானைகளிடையே பாலின விகிதம் பாதிக்கப்படுவதாகவும் ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

ஆகவே, மின்சார வேலி, மின்சார ஒயர்களால் யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டிய கட்டாயாத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறியவர் மேலும், "கோடைக்காலங்களில் யானைகளுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. அவற்றுக்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது. அதனால் தண்ணீருக்காக அனைத்து இடங்களுக்கும் செல்லும். யானைக்குத் தேவையான தண்ணீரை ஏற்படுத்திக் கொடுத்தால், யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைத் தவிர்க்கலாம்," என்று கூறினார்.

பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. "மனிதர்கள் இல்லாத உலகத்தில் பறவைகளும் மற்ற உயிரினங்களும் வாழும். ஆனால், பறவைகளும் மற்ற உயிரினங்களும் இல்லாத உலகத்தில், மனிதர்களால் உயிர் வாழ முடியாது."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Human-elephant conflict is a major conservation concern in elephant range countries
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X