செம..ப்ரீகேஜி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை கல்விகட்டணம் கிடையாது..சத்தீஸ்கரில் ராகுல் வாக்குறுதி
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தால் ப்ரீகேஜி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை கட்டணம் இன்றி இலவச கல்வி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். இந்நிலையில் தான் சத்தீஸ்கர் சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.

இதனால் மீண்டும் அங்கு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7 ம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17 ம் தேதி 2வது கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் நேரடியாக போட்டி உள்ளது. இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல் காந்தி சத்தீஸ்கரில் உள்ள பானுபிரதாப்பூர் சட்டசபை தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 ம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடக்கும் 20 தொகுதிகளில் பானுபிரதாப்பூர் தொகுதியும் ஒன்று. இந்நிலையில் தான் அங்கு பிரசாரம் செய்த ராகுல் காந்தி கூறியதாவது:
‛சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு கல்வி நிறுவனங்களில் ப்ரீகேஜி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை கல்வி கட்டணம் கிடையாது. அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும். Rajiv Gandhi Protection Yogana- மூலம் டெண்டு பட்டா (பீடி இலைகள்) விலையை ரூ.4,000 ஆக உயர்த்தப்படும். சிறு வனப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.10 உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இந்த பகுதியில் பஸ்தார் எனும் பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் பீடி இலை தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய ராகுல் காந்தியின் இந்த வாக்குறுதி என்பது அவர்களை கவரும் வகையில் உள்ளது. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மீண்டும் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி, ‛‛பிரதமர் மோடி தனது உரையில் ஓபிசி பிரிவினர் பற்றி பேசுகிறார். ஆனாலும் அவர் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குகிறார்? அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications