மாத சம்பளமோ 1.5 லட்சம்! கார்களின் விலையோ 14 கோடி? தில்லாலங்கடி அரசு ஊழியர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்துவந்த ஒருவர் ரூ.14 கோடி வெளிநாட்டு கார்கள், பைக்குகளை வாங்கி குவித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர்தான் சத்ரபால் சிங். இவர் ராஜ்காம்ப் இன்ஃபோ சர்வீசஸ் லிமிடெட் குழுமத்தில் பொதுமேலாளராக வேலை பார்த்து வருகிறார். இது ஒரு மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகும். அரசாங்க வேலை மூலம் மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார் இந்த அதிகாரி. இந்தக் காலத்தில் மாதம் 10 ஆயிரம் சம்பத்தில் ஒரு அரசாங்க வேலை கிடைக்காததா? என ஏக்கப் பெருமூச்சு விடும் கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர்.

சத்ரபால் சிங் வாங்கும் சம்பளமோ மாதம் ஒன்றரை லட்சம்தான். ஆனால், அவரது வீட்டில் ரூ.14 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு வாகனத்தை வாங்கி நிறுத்தி இருக்கிறார். அது மட்டுமா? வெளிநாட்டு அதிவேக பைக்குகள் சிலவற்றை வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இவரைப் பற்றி சக ஊழியர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது? வாங்கும் சம்பளத்தைவிட வைத்திருக்கும் சொத்துகளின் மதிப்பு பெருகிக் கொண்டே செல்வது எப்படி என ஆராய்ந்துள்ளனர். அதில் சிங் செய்த சில சீரியசான விசயங்கள் வெளியே வந்துள்ளன. அரசுப் பதவியைப் பயன்படுத்திப் பல கோடிகள் லஞ்சமாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மறைமுகமாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்குத் தகவலைத் தட்டிவிட்டுள்ளனர் சக ஊழியர்கள். அடுத்த நாளே சைரன் வேனில் வந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சைலண்டாக விசாரணை நடத்தி உள்ளனர்.
அதிகாரிகள் நடத்திய சோதனையில் சத்ரபால் சிங் பெற்ற பல லஞ்ச விவகாரங்கள் வெளியே வந்துள்ளன. ரூ. 1.5 லட்சம் மாத வருமானத்தில் இவர் போர்ஷே, லேண்ட் ரோவர், ஹிந்திரா தார், மஹிந்திரா ஸ்கார்பியோ, செவர்லே க்ரூஸ் என விதவிதமான வெளிநாட்டு கார்கள் மற்றும் கூடனே ட்ரையம்ப், பிஎம்டபிள்யூ பைக்குகளையும் வைத்துள்ளார். அதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றைத் தவித்து வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்தச் சோதனையின் போது, சிங்கிற்குச் சொந்தமான இரண்டு விலையுயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருந்துள்ளது. அதற்கான ஆவணங்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் குடியிருப்புகள் அஜ்மீர் சாலையில் அமைந்துள்ளன. சோடலா மகாதேவ் நகரில் இவருக்குச் சொந்தமாக வீடு ஒன்றும் இருந்துள்ளது. வீட்டில் ரூ.6 லட்சம் பணம் ரொக்கமாக வைத்திருந்ததை கையும் களவுமாகக் கண்டுபிடித்துள்ளனர். ராஜா பூங்காவில் சிம்ப்லி டிவைன் என்ற பெயரில் ஸ்பா மையம் நடத்தி வந்த ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அசோக் நகரில் பதிவு செய்யப்பட்ட ஹேப்பி ஹார்ட் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையையும் நடத்தி வந்துள்ளார். இந்த இரண்டு நிறுவனங்களும் சிங் குடும்பத்தினரால் இயக்கப்பட்டன.
ஒரு லேண்ட் ரோவர் டிஃபென்டரின் விலை 1 கோடிக்கு மேல். இவர் பயன்படுத்திய கெய்ன் எஸ்யூவியை மலிவான விலையில் இருக்கலாம் என்றும் ஆனால் அதற்காகக் குறைந்தது 10 லட்சம் மேல் இவர் செலவழித்திருப்பார் என்றும் சொல்லப்படுகிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N 4×4 வேரியண்ட், உயர்தர மாடலின் விலை சுமார் ரூ. 25 லட்சம். தார் 4×4 விலை சுமார் ரூ.20 லட்சம். அதேபோல் சிங்கின் வீட்டிலிருந்த பைக்குகள் லட்சங்களில் விலை போகும்.
இந்தச் சொத்துக்கள் அனைத்தும் இப்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர். சிங் இந்தியாவுக்கு வெளியே ஏதேனும் சொத்துக்கள் வைத்திருக்கிறீர்களா? என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறது. மேலும் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் சொகுசு பங்களாவில் தங்கியது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் (டிஓஐடி) நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.3,500 கோடி ஊழல் குறித்து அமைச்சர் கிரோடி லால் மீனா, உள்துறை இணை அமைச்சர் ஜவஹர் சிங் பெதாமிடம் கவலை தெரிவித்தார். ராஜ்காம்ப் என்ற இந்த நிறுவனம் ஆலோசனை சேவைகளை வழங்கி, மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பராமரித்து வருகிறது. இதில்தான் சத்ரபால் சிங் வேலை பார்த்துவந்தார்.












Click it and Unblock the Notifications