புனரமைத்து 4 நாட்கள் கூட ஆகவில்லை.. "எப்.சி" இல்லை.. குஜராத் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது எப்படி?
காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பாலத்தை புதுப்பித்த தனியார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. Oreva என்ற தனியார் நிறுவனம் அரசு ஒப்பந்தம் மூலம் இந்த புனரமைப்பு பணிகளை செய்துள்ளது.
குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. நேற்று முதல்நாள் சியோலில் ஹாலோவீன் கொண்டாடத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 151 பேர் பலியானார்கள்.
ஒரே இடத்தில் 1 லட்சம் பேர் கூடிய நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக இவர்கள் பலியானார்கள். அதேபோல் நேற்று குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலத்தில் 500 பேர் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் பாலம் இடிந்து விழுந்து 102 பேர் வரை பலியாகி உள்ளனர்.

திறக்கப்பட்டது எப்போது
1879ல் திறக்கப்பட்ட இந்த பாலம் 230 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். 7 மாதங்களாக மூடப்பட்டு இருந்த இந்த பாலம் புனரமைக்கப்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் 26ம் தேதிதான் இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. Oreva என்ற தனியார் நிறுவனம் அரசு ஒப்பந்தம் மூலம் இந்த புனரமைப்பு பணிகளை செய்துள்ளது. இந்த நிறுவனம் பாலத்தை புதுப்பித்த பின் அதற்கான பிட்னஸ் சர்டிபிகேட் கையெழுத்தை வாங்க வேண்டும். ஆனால் அதை வாங்காமல் அவர்கள் பாலத்தை மக்களுக்கு திறந்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.

புகார்
அரசு ஒப்பந்தம் மூலம் அந்த தனியார் நிறுவனம் இந்த பணிகளை செய்து உள்ளது. பாலம் திறந்து 4 நாட்களில் இடிந்து விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் பாலத்தில் சென்றதுதான் பாலம் இடிந்து விழ காரணம் என்று கூறப்படுகிறது. பாலத்தை திறக்கும் முன் பொதுவாக அதிகாரிகள் இதை ஒரு முறை சோதனை செய்ய வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட சோதனைகள் எதுவும் நடக்காமல் பாலம் திறக்கப்பட்டு உள்ளது.

பாலம் திறப்பு
இந்த பாலத்தில் நேற்று மக்கள் இருந்த போது சிலர் உற்சாகத்தில் பாலத்தின் மீது ஓடி, குதித்து உள்ளனர். இதில் பாலம் வேகமாக ஆட தொடங்கி உள்ளது. பாலம் ஆடிய நிலையில் அதில் இருந்த மக்களும் ஆட தொடங்கி உள்ளனர். இது பாலத்தின் ஆட்டத்தை மேலும் அதிகப்படுத்தி கடைசியில் பாலம் இடிந்து விழ காரணம் ஆகி உள்ளது. இந்த பால விபத்து தொடர்பாக விசாரணை முடிக்கி விடப்பட்டு உள்ளது.

பலி எண்ணிக்கை
இந்த கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலியாகி உள்ளனர்.177 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 19 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.தண்ணீருக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.












Click it and Unblock the Notifications