கல்லூரி வளாகத்தில் மாணவி தொழுகை.. கிளம்பிய எதிர்ப்பு.. பறந்து வந்த அதிரடி உத்தரவு! அதிரும் குஜராத்
காந்திநகர்: குஜராத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவி தொழுகை செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், இனி மதம் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு இஸ்லாமிய மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மாணவர்களின் மிரட்டலுக்கு கல்வி நிலையம் அடிப்பணிவது சரியல்ல எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் அடங்கிய சிறிது நாட்களிலேயே, குஜராத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மீண்டும் மத விவகாரம் பூதாகரமாவது கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழுகை கூட குற்றமாகுமா?
இஸ்லாமியர்கள் நாளொன்றுக்கு 5 வேளை தொழுகை செய்வது வழக்கம். இஸ்லாம் மதம் கூறும் கடமைகளில் முதன்மையானது கடவுளை தொழுவது. இதனால் வெளியே எங்கே சென்றாலும், சிறிய வாய்ப்பு இருந்தால் கூட சில இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதை பார்த்திருப்போம். இதற்கு மற்ற மதத்தினர் இடையூறு செய்வது இல்லை. ஆனால், சமீபகாலமாக மத வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதை கூட ஒருசிலர் குற்றமாக கருதும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

லூலூவில் தொடங்கிய சர்ச்சை
உத்தரபிரதேசத் தலைநகர் லக்னோவில் புதிதாக அமைந்த லூலூ வணிக வளாகத்தில் கடந்த ஆண்டு முஸ்லிம் வாடிக்கையாளர்கள் சிலர் தொழுகை நடத்தினர். இதனை வெளியே இருந்து வீடியோ எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு இந்தியாவில் அனுமதி தந்தால், அவர்கள் இங்கு மதப் பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை போல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பொது இடத்தில் தொழுகை நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சில இந்து அமைப்புகள் போராட்டங்களிலும் ஈடுபட்டன. இதுதான், இந்தியாவில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதை எதிர்த்து நடத்தப்பட்ட முதல் போராட்டமாக கருதப்படுகிறது.

குஜராத் பல்கலைக்கழக மாணவி
இந்நிலையில், குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள எம்எஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முஸ்லிம் மாணவி ஒருவர், வகுப்பறையில் ஒரு ஓரமாக தொழுகை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த ஒரு மாணவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து மற்ற மாணவர்களுக்கு பரப்பினார். இது அங்கு பெரும் சர்ச்சையாக மாறியது. எப்படி பல்கலைக்கழக வகுப்பறையில் மத வழிபாடு நடத்தலாம் என ஒரு தரப்பு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக பல இந்து அமைப்புகளும் போராட்டம், பேரணியை நடத்தினர்.

அதிரடி உத்தரவு
சர்ச்சையும், போராட்டங்களும் தீவிரமாக மாறுவதை உணர்ந்த எம்எஸ் பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று ஒரு சுற்றறிக்கையை தனக்கு கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியது. அதில், "நாட்டில் உள்ள முக்கிய உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக எம்.எஸ். பல்கலைக்கழகமும் திகழ்கிறது. எனவே, பல்கலைக்கழக வளாகத்தில் எந்த மதம் சார்ந்த நடவடிக்கைகளிலும் மாணவர்களும், பேராசிரியர்களும் ஈடுபடக்கூடாது. இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழுகையில் ஈடுபட்ட மாணவியை கண்டறிந்து அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications