‛சோலோகாமி’.. மணமகன் இன்றி தன்னையே திருமணம் செய்யும் இளம்பெண்! கோவாவுக்கு ஹனிமூனாம்!
காந்திநகர்: இந்தியாவில் முதல் முறையாக மணமகன் இன்றி தனக்கு தானே குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த 24 வயது இளம்பெண் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ‛சோலோகாமி' எனும் இந்த திருமணத்துக்கு பிறகு அவர் கோவாவுக்கு ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளார்.
Recommended Video
ஆண், பெண் என எதிரெதிர் பாலினங்களின் இருமனம் ஒன்றாக இணைந்து இல்லற வாழ்க்கையை துவங்குவது தான் திருமணம். இதைத்தான் நாம் காலம் காலமாக கூறி வருகிறோம். ஆனால் தற்போதைய நவீன உலகம் மாறிவிட்டது.
அதாவது திருமணம் எல்லாம் ரொம்ப போர் அடித்துவிட்டது. வேண்டுமானால் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம் என ‛லிவ் இன் ரிலேசன்ஷிப்' வாழ்க்கை முறையை இன்றைய இளம்வயதினர் பின்பற்ற தொடங்கிவிட்டனர்.

தன்னைத்தானே திருமணம்
இது ஒருபுறம் இருக்க எதிர்பாலினம் மீது ஈர்ப்பு இன்றி இருபெண்கள் சேர்ந்து வாழவும், இருஆண்கள் இணைந்து வாழவும் சில நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன. இந்த காலத்தில் இப்படி பல பரிணாமங்களில் வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் முறையும் பல நாடுகளில் பரவி வருகிறது.

இந்தியாவிலும் நுழைந்த கலாசாரம்
இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இத்தகைய திருமணங்கள் நடைமுறையில் உள்ள நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த கலாசாரம் கால்தடம் பதிக்க உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும். ஒன்றும் புரியவில்லையே, தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வதா? யார் இதை செய்கிறார்? எதற்காக செய்கிறார்? என்பது பற்றி நீங்கள் கேட்பது புரிகிறது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:

குஜராத் பெண்
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் ஷாமா பிந்து (வயது 24). இவர் தான் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். ‛சோலோகமி' என அழைக்கும் இந்த திருமணத்தை பிந்து ஜூன் 11ல் வெகு விமரிசையாக நடத்த உள்ளார். அதாவது ஆணோ, பெண்ணோ திருமணத்தின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருப்பவர்கள் தான் ‛சோலோகமி' எனும் தன்னைத்தானே மணம்முடிக்கும் திருமணத்தை செய்கின்றனர்.

காரணம் என்ன?
பொதுவாக மற்றவர்கள் மீது நம்பிக்கை குறைந்தவர்கள் இத்தகைய திருமணங்களை செய்து கொண்டு தன்னைத்தானே அதிகம் விரும்புவர்களாக காட்டி கொள்கின்றனர். அதாவது தன்மீதான சுயகாதல், சுய அங்கீகாரம் ஆகியவற்றை வெளியுலகிற்கு கூறும் வகையில் இதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிந்து தன்னைத்தானே அதிகம் விரும்புவதை வெளிக்காட்டும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறை
இத்தாலி, இங்கிலாந்து உள்பட சில மேற்கத்திய கலாசார நாடுகளில் இத்தகைய திருமணங்களை ஆண்கள், பெண்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் முதல் முறையாக பிந்து தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள உள்ளார். ஜூன் 11ல் நடைபெற உள்ள மாப்பிள்ளை இல்லாத திருமணத்துக்கான ஏற்பாட்டை பிந்து மும்முரமாக மேற்கொண்டு வருகிறார்.

திருமணம் எப்படி நடக்கும்?
மணமகன் இல்லாத இந்த திருமணத்தின்போது பிந்து மணப்பெண் கோலத்தில் மணமேடையில் அமர்ந்து தனக்குத்தானே நெற்றியில் குங்குமம் வைத்து தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வார். மெஹந்தி, இசை கச்சேரி, மேடை அலங்காரம், அழைப்பிதழ் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்துள்ள பிந்து தனது பாரம்பரிய முறைப்படி மணப்பெண்ணாகி தன்னையே மணந்து கொள்வார். திருமணத்துக்கு பிறகு கோவாவுக்கு ஹனிமுன் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

மணப்பெண்ணாக ஆசை
இது குறித்து பிந்து கூறுகையில், ‛‛எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. ஆனாலும் மணப்பெண்ணாக தோன்ற ஆசைப்படுகிறனே். இதனால் நான் என்னையே திருமணம் செய்து கொள்கிறேன். ஒவ்வொருவரும் தங்களையே அளவுக்கு அதிகமாக விரும்ப வேண்டும். இந்த திருமணம் மூலம் நான் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பேன். இந்தியாவில் இத்தகைய திருமணம் நடந்துள்ளதா என இணையதளத்தில் தேடிப்பார்த்தேன். அப்படி எதுவும் நடந்ததாக இல்லை.

பெற்றோர் அனுமதி; 5 உறுதிமொழி
ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தன்னை முழுவதுமாக நேசிக்கவும், எத்தகைய சூழலிலும் உறுதியாக செயல்பட வேண்டும் என்பதற்கான ஆற்றலை வழங்கும் என நம்புகிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கின்றனர். ஒருவர் மீது காதல் மலர்வது, வம்சத்தை வளர்ப்பது, இல்லற வாழ்க்கையை அனுபவிப்பது, தங்களின் மகிழ்ச்சி, பிரச்சனைகளை மனம்விட்டு ஒருவரிடம் பேசுவது என ஒவ்வொருவரும் திருமணத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றனர். எனக்கு இதில் உடன்பாடில்லை. நான் என்னைக் காதலிக்கிறேன். ஆகையால், நான் என்னை திருமணம் செய்துகொள்ளபோகிறேன். இதற்கு எனது பெற்றோரும் அனுமதி அளித்துள்ளனர். திருமணத்தின்போது 5 உறுதிமொழிகளை எடுத்து கொள்ள உள்ளேன்" என்றார்.












Click it and Unblock the Notifications