அடேங்கப்பா.. இமாச்சல பிரதேச தேர்தலில் 80 வயது வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? வியப்பு
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தம் 7881 ஓட்டுச்சாவடிகளில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 17.9 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.

தலைவர்கள் வேண்டுகோள்
இங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி உள்ளது. மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமைதியாக தேர்தல்
இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 7881 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் 157 ஓட்டுச்சாவடிகளை முழுமையாக பெண்கள் மட்டுமே நிர்வகித்து வருகின்றனர். குழந்தைகளுடன் ஓட்டுச்சாவடிக்கு வரும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளோம். அமைதியான முறையில் தேர்தல் நடக்கிறது.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்
மொத்தம் 55,74,793 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 56,000 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்கள் ஓட்டு செலுத்த வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதோடு 37 வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் நிர்வகித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இதனை செய்துள்ளோம்.

1.20 லட்சம் வாக்காளர்கள்
மேலும் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 1.20 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். நான் அவர்களை தலை வணங்குகிறேன். அவர்களிடம் இருந்து உத்வேகத்தை பெறுவதன் மூலம் இளைஞர்கள் முன்னேற்றம் அடையலாம். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான மறைந்த ஷியாம் சரண் நேகிக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்கு அனைவரும் தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்'' என்றார்.

மொத்த வாக்காளர்கள்
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இவர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,500 பேர் மட்டுமே ஓட்டளிக்க முடியும். அதன்படி மாநிலத்தில் மொத்தம் 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications